நாள் முழுதும் அன்னதான திட்டம் ! தமிழக முதல்வர் தொடக்கம்!

நாள் முழுதும் அன்னதான திட்டம் !   தமிழக முதல்வர்  தொடக்கம்!

எந்தக் காலமானாலும், இறைவனை தரிசிக்க ஆலயங்களை நோக்கிப் பக்தர்கள் கூட்டம் குவிகின்றனர். அவர்களுக்குப் பலவித வசதிகளை அறநிலையத்துறை செய்து வருகிறது.

தங்குமிடங்கள், தரிசிக்க எளிமையான வழிகள், பிரசாதக் கூடங்கள், குளியலறைகள் , குடிதண்ணீர்போன்ற வசதிகளெல்லாம் இப்போது உள்ளன.

காலநேரம் பார்க்காமல், பக்தர் கூட்டம் இறைவனைத் தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருப்பர். கட்டணத் தரிசன வரிசையிலும், விசேட நாட்களில், கூட்டம் மிகுந்து காணப்படும். இந்த நேரத்தில் கடவுளை ஆனந்தமாய் தரிசித்து, அவனருளைப் பெறவேண்டும் என்பதே பக்தர்களின் நோக்கமாகும். பசி, தூக்கம் மறந்து காத்திருப்பார்கள்.

தற்சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் அனைத்து ஆலயங்களிலும், பக்தர்களின் பசிபோக்க, மதியம் அன்னதானம் வழங்கப் படுகிறது. நல்ல வாழையிலை விரித்து சாதம், சாம்பார், கூட்டோடு நாள் தோறும் பரிமாறப் படுகிறது. இதற்கு, அரசின் நிதியுதவியோடு நன்கொடையாளர்களும் உதவுகிறார்கள். ஆண்டவன் அருளோடு, இந்த அன்னதானத்தையும் உண்ணும் பக்த கோடிகள் பரமானந்தம் கொள்ளுவார்கள்.

இந்தியாவில், பல மாநிலங்களில், அன்னதானத் திட்டம் இருந்தாலும், நமது தமிழ் நாட்டில், ஒருபடி முன்னே போய், நாள் முழுதும் அன்னதான திட்டம் என்று, இன்று(31-12-2022) காலை 10.30 மணிக்கு, மாண்புமிகு தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று ஆலயங்களில் இன்று (31-12-2022) துவங்கி வைக்கப்பட்டு, உடனேயே அன்னதானம் பரிமாறும் நிழ்ச்சியும், தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், நாள்முழுதும், தங்கு தடையில்லாமல், இறைவனை நாடி வரும் பக்தர்களெல்லாம், பசியாறி மகிழ்வார்கள். யாரும் பசியால் துன்பப்பட போவதில்லை. ஆலயத்திற்கு வெளியே, உணவகங்களைத்தேடிப் போகும் வேலை இருக்காது.

இந்த வருடத்தின் இறுதி நாளில் இத்திட்டத்தை, தலைமை செயலகத்திலிருந்து, தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்க, அறநிலையத்துறை அமைச்சர், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com