எய்ம்ஸ் மதுரைக்கான நிதி ஒதுக்கீடு - ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம், காங்கிரஸ் எம்.பியின் யோசனை!

எய்ம்ஸ் மதுரைக்கான நிதி ஒதுக்கீடு - ஜப்பான் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாம், காங்கிரஸ் எம்.பியின் யோசனை!

கடந்த பட்ஜெட்டில் மதுரையில் வரவிருக்கும் எய்ம்ஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தமிழக முதல்வரும் குறை கூறியிருந்தார். நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்ததாக இடதுசாரி அமைப்புகளும் கருத்து தெரிவித்திருந்தன. எய்ம்ஸ் திட்டம் ஜப்பானிய நிதியில் செயல்படப்போகிற திட்டமே தவிர மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் வரப்போவதில்லை என்று மத்திய அரசு தந்த விளக்கங்களை தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் அலட்சியப்படுத்தின.

மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியிருந்தார். மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வரும் எம்.பி எப்படி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் தவறான எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார் என்பது ஆச்சர்யமளிக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதாக திட்டமில்லை. ஏற்கனவே ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த நிதி வந்து சேரும் வரை, மதுரையில் எய்ம்ஸ் கட்டிடப் பணிகள் நடக்கப்போவதில்லை என்கிற உண்மையை விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக் தாகூர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

'ஜப்பான் அரசிடமிருந்து நிதி வரும் வரை மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக எந்த வேலையும் நடக்கப் போவதில்லை. 82 சதவீதம் அதாவது 1300 கோடி ரூபாய்க்கு மேல் ஜப்பான் அரசு நிதியுதவி செய்தாக வேண்டும். ஜப்பான் அரசு எப்போது பணம் கொடுக்கிறதோ அதற்குப் பிறகுதான் எய்ம்ஸ் கட்டிடம் கட்டப்படும். எனக்குத் தெரிந்த வரை 2024 ஏப்ரல் வரை இந்த பணி தொடங்கப் போவதில்லை' என்று குறிப்பிட்டவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உடனே வரவேண்டுமென்றால் ஜப்பான் அரசுடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பின்னர் மத்திய அரசே முன்வந்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மாணிக் தாகூரின் யோசனை வரவேற்கத்தக்கது. நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மாநில அரசு, இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதலாம். ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறிப்பிடுவது என்னவென்று தெரியவில்லை. ரத்து செய்யப்படுவதால் வரும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்க முடியும்.

ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, மத்திய அரசு தன்னுடைய நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவேண்டும். அடுத்து வரும் ஓராண்டுக்குள் இதையெல்லாம் செய்து முடிக்க வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். நம்பிக்கையோடு காத்திருப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com