மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்றார்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்றார்!

கொரோனா பெருந்தொற்று, தலைநகர் சென்னையில் பெருமழை, வெள்ளம் போன்ற கடுந்துயரில் மிகச் சிறப்பாகச் செயலாற்றி மக்கள் பணி செய்தவர் ககன்தீப் சிங் பேடி. எந்தத் துறைக்குப் பொறுப்பேற்றாலும் அதில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர் என்ற பெயர் பெற்ற இவர், தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்.

திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்தார். முன்னதாக, 1993ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ககன்தீப் சிங் பேடி, குமரி மாவட்ட ஆட்சியராகவும், மதுரை மற்றும் கோவை ஆணையராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ககன்தீப் சிங் பேடி மேற்கொண்ட நிவாரணப் பணிகள் பொதுமக்களிடையே அவருக்குப் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு பெய்த பெருமழை வெள்ளத்தின்போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் பணியாற்றி, மாவட்ட நிலைமை விரைவில் சீரடைய பேருதவி புரிந்து இருக்கிறார் ககன்தீப் சிங் பேடி. இவற்றைத் தொடர்ந்து வர்தா மற்றும் ஒக்கி புயல் பாதிப்பின்போதும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள இவரே நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, கஜா புயலின் போதும் இவர் மிகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இவர்தான் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இத்துறைகள் தொடர்புடைய அதிகாரிகள் இவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com