சென்னையில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், இதற்கு தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தான் காரணம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் (ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர்) குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு மண்டலங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ரூ.2,363 கோடி செலவில் தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி சமீபத்தில் முடிவு செய்தது. 10 ஆண்டுகளுக்கு ரூ.2,363 கோடி செலவில், வீடு வீடாகச் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து சேகரிப்பது, தெருக்கள் மற்றும் நடைபாதைகளைச் சுத்தம் செய்வது போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
இது ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தை வழங்குவதாகவும், இதனால் தங்கள் குடும்பத்தை நடத்துவது கடினம் என்றும் கூறுகின்றனர்.
தனியார் நிறுவனத்தின் கீழ் பணியாற்றினால் மாதத்திற்கு ரூ.12,500 மட்டுமே கிடைக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தூய்மைப் பணிகள் பழையபடி மாநகராட்சி வசம் இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே தங்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, பிற மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களும் வேலைக்கு வராததால், சென்னை முழுவதும் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரப் பணியாளர்கள் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
NULM-இன் கீழ் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர், அவர்களில் பலர் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாகவே, அவர்களை மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு மாநகராட்சி தங்களை அழைக்கவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.