காஸாவில் தொடரும் அவலம்: பட்டினியால் 180 பேர் உயிரிழப்பு..!

காஸாவில் பட்டினியால் மேலும் ஐந்து பேர் உயிரிழப்பு: மருத்துவத் துறை திணறுகிறது
காஸா வாசி சலீம் அஸ்ஃபூர்
Gaza war
Published on

காஸாவில் பட்டினியால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். 

அங்குள்ள மருத்துவத் துறையால் இந்தச் சுமையை இனி தாங்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்ரேலின் முற்றுகையால் சூழப்பட்ட காஸாவில், பட்டினியால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 93 பேர் குழந்தைகள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலின் போரால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 60,199-ஆக உயர்ந்துள்ளது.

காஸாவின் மருத்துவ மற்றும் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக சீர்குலைந்துள்ளது. கடுமையான உணவுப் பற்றாக்குறை, குழந்தைகளிடையே பரவியுள்ள ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பின் சரிவு இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

சுகாதார வல்லுநர்களின் எச்சரிக்கை

காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா, நிலைமை உச்சகட்ட நெருக்கடியை எட்டியுள்ளதாக தெரிவித்தார். 

“இஸ்ரேல் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பட்டினிக் கொள்கையால், காஸாவில் தினமும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  பசியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எங்களால் கையாள முடியவில்லை, நாங்கள் முற்றிலும் திணறிவிட்டோம்,” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

75 வயதான காஸா வாசி சலீம் அஸ்ஃபூர், நீண்டகால உணவுப் பற்றாக்குறையால் தனது உடல் எடையில் பாதிக்கு மேல் இழந்துள்ளார். 

75-year-old Salim Asfour
75 வயதான காஸா வாசி சலீம் அஸ்ஃபூர்image : thenationalnews
“என்னால் உதவிப் பொருட்களை எடுக்கச் செல்ல முடியவில்லை.  10 மீட்டர் தூரம் கூட நடக்க முடியாத நிலையில் உள்ளேன்,”

என்றெல்லாம் அங்கிருந்து வரும் செய்திகள் நமக்குத் தெரிவிக்கின்றன.. 

“கழிவறைக்குச் செல்லவே என் மகனின் உதவி தேவை. 75 வயதில் ஒரு மூட்டை மாவை எப்படிச் சுமப்பேன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதால், சர்வதேச நாடுகள் உணவு மற்றும் உதவிப் பொருட்களை வான்வழியாக விநியோகிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பல நாடுகளின் உதவியுடன், ஞாயிற்றுக்கிழமை 61வது உதவி விமானம் அனுப்பப்பட்டது. நிலவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி வழங்குவதே இதன் நோக்கம்.

காஸாவில் தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் “கிடைக்கக்கூடிய எல்லா வழிகளிலும்” சென்றடைய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் (UAE) வலியுறுத்தி உள்ளது.

ஆனால், ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா, வான்வழி உதவியை விட நிலவழிப் பாதைகளைத் திறப்பதே அதிக உதவிகள் போய்ச் சேர்வதற்கு மிக முக்கியமான மற்றும் பயனுள்ள வழி என்று கூறினார்.

களத்தில் உள்ள இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

“வான்வழி உதவிகளைப் பெற, உடல் வலிமையுள்ளவர்கள் அல்லது வாகனம் உள்ளவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுகின்றனர்,” என்று ஐந்து குழந்தைகளின் தந்தை முகமது அபு அட்கேம்,தெரிவித்தார்.

காஸாவிலிருந்து ஒரே ஒரு கோரிக்கை உரத்து ஒலிக்கிறது: “நிலவழி எல்லைகளைத் திறந்துவிட வேண்டும்...

திறந்து, அங்கே உதவிகளை அதிகரிப்பதே உண்மையான தீர்வாகும்,” என்று காஸாவின் அரசு ஊடக அலுவலக இயக்குநர் இஸ்மாயில் அல்-தவாப்தா வலியுறுத்தினார். 

“அந்த உதவிகள் UNRWA போன்ற அமைப்புகளால் நியாயமாக, பாதுகாப்பாக, மற்றும் கண்ணியத்துடன் விநியோகிக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com