
இஸ்ரேல் நாடு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவத்திற்கும் - ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தும், வீடுகளை இழந்தும் தவித்து வருகிறார்கள்.
காசா மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் நீண்டு வருகிறது. இந்நிலையில் எகிப்தில் காசா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில், காசாவில் அமைதியை மீண்டும் கொண்டு வருவதற்காக நிலை நிறுத்துவது தொடர்பாக இன்று இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காசாவில் அமைதியை கொண்டு வருவதற்காக, டிரம்ப் 20 அம்சங்கள் அறிவித்துள்ள ஒப்பந்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன்அடிப்படையில் கடந்த சில நாட்களாகவே காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில், டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.இருதரப்பிலும் போர் நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.
இந்த வராலாற்று முக்கியத்துவம் மிக்க காசா அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரமதர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காசா மக்களின் கவலைகள் ஓய்ந்து அமைதியில் அவர்கள் திரும்ப வாழப்போகும் நல்ல நாட்களை உலக மக்கள் அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.