முதல்வர் பதவியை கெலோட் விட்டுக் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருத்து

முதல்வர் பதவியை கெலோட் விட்டுக் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருத்து

முதல்வர் பதவிக்கு நான் போட்டியாளர் இல்லை என்று தற்போதைய முதல்வர் அசோக் கெலோட் வெளிப்படையாக அறிவித்து, இளைய தலைமையை ஆதரித்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ. பரத் சிங் குந்தன்பூர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவை சந்தித்துப் பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கும் வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார்.

அசோக் கெலோட் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பமாகும், முதல்வர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன். இளைஞர்களுக்கு வழிவிடத் தயாராக இருக்கிறேன் என்று கூறுவாரேயானால், காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுக்கும்.

ஆனால், பதவி மோகம், மதுவினால் ஏற்படும் போதையைவிட பெரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அசோக் கெலோட்டின் முந்தைய அரசில் அமைச்சராக இருந்தவர் பரத் சிங் குந்தன்பூர். அவர் கோட்டா மாவட்டம், சங்கோட் தொகுதியைச் சேர்ந்தவர்.

சுரங்கத்துறை அமைச்சர் பிரமோத் ஜெயின் பையா மீது ஊழல் புகார் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கெலோட்டுக்கு கடிதம் எழுதியவர் குந்தன்பூர். நான் யாருக்கும் ஆதரவாளர் இல்லை, எதிர்ப்பாளரும் இல்லை. எனக்கு சரி எனப்படுவதை வெளிப்படையாக சொல்லத் தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழல் விவகாரத்தை முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் எழுப்பி வருகிறாரே என்று கேட்டதற்கு, நாங்கள் இருவரும் வெவ்வேறு தனிப்பட்ட நபர்கள். அவர் வழி வேறு. என் வழி வேறு என்றும் குந்தன்பூர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியில்தான் என்னைப் போன்ற தலைவர்கள் பிரச்னைகளை எழுப்ப முடியும். இதுவே பா.ஜ.க.வாக இருந்தால் நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்தது போதும் என நினைத்து கெலோட் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். கடைக்காரருக்கு வயதாகிவிட்டால், அடுத்த தலைமுறை தலைமைப்பதவிக்கு வருவதில்லையா. அதுபோல்தான் இதுவும் என்று குந்தன்பூர் விளக்கினார்.

யார் என்ன பதவியில் இருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சரி என பட்டத்தை நான் தைரியமாக கூறுவேன். அதற்காக நான் தவறு செய்யமாட்டேன் என்று அர்த்தமல்ல. தவறு செய்வது சகஜம்தான். ஆனால், அதை ஒப்புக்கொள்வது நல்லது. அப்படிச் செய்யாவிட்டால் அவரை ஈகோ தடுக்கிறது என்று அர்த்தம் என்றார் அவர்.

இதனிடையே தேர்தல் என்று வந்தால் வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்களுக்குத்தான் டிக்கெட் வழங்கப்படும். இதில் வயது வரம்பு பார்க்க முடியாது என்று காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தாவா தெரிவித்துள்ளார். வீட்டில் ஒருவருக்கு வயதாகிவிட்டது என தெரிந்தால் அதற்காக அவரை வெளியே அனுப்பிவிவோமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மூத்த தலைவர்கள் இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்று எம்.எல்.ஏ. பரத் சிங் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, முதலில் அவர் இதற்கு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்று ரந்தாவா பதில் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com