பொதுச்செயலாளர் பதவி: உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுத் தாக்கல்!

பொதுச்செயலாளர் பதவி: உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுத் தாக்கல்!

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், துணைப் பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அந்தக் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுவிட்ட நிலையில், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் சசிகலாவையும் தினகரனையும் அதிமுகவிலிருந்தும் கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்கியதோடு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

அதைத் தொடர்ந்து சசிகலா, கட்சியிலிருந்து தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற நீதிமன்றம், இந்த வழக்கை தாக்கல் செய்ய, சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சசிகலா. இந்தச் சூழ்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்றக் கட்டணத்தைச் செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட வேண்டும் அல்லது அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தாக்கல் செய்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து, தற்போது இந்த வழக்கு சம்பந்தமாக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் செம்மலை தரப்பு மேல்முறையீடு செய்யலாம் என்பதால் தம்மையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் நடந்தது சசிகலாவை நீக்கியது. தற்போது ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி இருவரும் தனித்தனியாகப் பிரிந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சசிகலா தாக்கல் செய்திருக்கும் கேவியட் மனு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com