ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து. விவசாயிகள் மகிழ்ச்சி.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து. விவசாயிகள் மகிழ்ச்சி.
Published on

திருச்செந்தூர், ஆத்தூர் அருகே விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே நெல், வாழை மற்றும் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக 500 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் இது விளைவதால் காரம், மணம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கிறது.  ஆத்தூர் வெற்றிலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் மவுசு அதிகம். பல ஆண்டுகளாக இந்த வெற்றிலைக்கு அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மேலும் இந்த புவிசார் குறியீடு கிடைக்க முயற்சி செய்த அனைவருக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது தோற்றத்தை குறிக்கும்படியாக ஒரு பொருளின் மீது கொடுக்கப்படும் அந்தஸ்தாகும். இந்த குறியீடானது அந்த பொருளின் மீது புவிசார்ந்து இருக்கும் தரத்தையும், நன்மதிப்பையும் எடுத்துரைக்கும் சான்றாக அமைகிறது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அந்தந்த இடத்தை தவிர வேறு எங்கும் அதே தரத்தில் பயிரிட முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு பயிரிட்டு சந்தைப் படுத்தினால் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கலாம். 

இதைப் பற்றி வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது, "மிக நீண்ட காலமாக பயிரிடப்பட்டு வரும் இந்த வெற்றிலைக்கு மத்திய அரசின் தரக் கட்டுப்பாட்டுக் குறியீடான புவிசார் குறியீடு தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் ஆத்தூர் வெற்றிலையின் தன்மையை உலகம் முழுவதும் அறியும்படியான நிலை இந்த புவிசார் குறியீட்டு அந்தஸ்தால் கிடைத்துள்ளதை நினைத்தால், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்த மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். என்னதான் இந்தியாவிலுள்ள பல இடங்களுக்கு நம்முடைய ஆத்தூர் வெற்றிலையை நாங்கள் ஏற்றுமதி செய்தாலும், அவற்றுக்கான எந்த உதவியும் அரசாங்கம் எங்களுக்கு செய்வதில்லை. பெரும்பாலும் இயற்கை உரத்தையே நாங்கள் பயன்படுத்துவதால், தற்போது பல்வேறு விதமான நோய் தாக்குதல்களுக்கு வெற்றிலைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதற்காக எங்களுக்கு உரிய உதவி அரசிடமிருந்து கிடைத்தால் நன்றாக இருக்கும்" என விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com