நாம் வாழும் பூமி இடம் பெற்றுள்ள சூரிய மண்டலத்தில் ஏராளமான சிறிய கோள்கள், விண்கற்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. பூமியை நெருங்கி வரும் விண்கற்கள் குறித்து விண்வெளி ஆய்வு மையங்கள் அவ்வப்போது எச்சரிக்கை செய்துதான் வருகின்றன. அவை பூமி மீதோ அல்லது வேறு கிரகங்களின் மீதோ மோதுவதும் அல்லது அவற்றின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதும் வழக்கமாக உள்ளது. விண்கற்கள் பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து வெளியேறிய கிரகங்களின் மிச்சம்தான் இந்த விண்கற்கள் எனச் சொல்லப்படுகின்றன. இவை விண்வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றன. ஒரு கிரகத்தின் புவி ஈர்ப்பு பாதைக்கு அருகே இவை வரும்போது புவி ஈர்ப்பு விசையால் அவை அந்த கிரகத்துக்குள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது. அண்மையில், நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வருங்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பற்றித் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கும் என்றும் அவற்றில் இரண்டு பூமிக்கு மிக நெருக்கமாக வரக் கூடியவை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.
நாசா சிறுகோள் கண்காணிப்பு டேஷ்போர்டு இந்த விண்கற்கள் மற்றும் வால்மீன்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் பூமியை நெருங்கும் தேதி, விண்கல்லின் உத்தேச விட்டம், பூமியிலிருந்து எவ்வளவு தொலைவுக்கு அருகே வருகிறது போன்ற விவரங்களை இந்த டேஷ்போர்டு வெளியிடுகிறது.
2023 FZ3 என்ற விண்கல் நாளை மறுநாள், அதாவது ஏப்ரல் 6ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் மிகவும் பெரியது. அதாவது, ஒரு விமானத்தின் அளவு இந்த விண்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 150 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியை நோக்கி 67 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. பூமிக்கு மிக அருகில் வரும் இது 4.19 லட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும் என நாசா கணித்துள்ளது. எனினும் இந்த விண்கல் பூமிக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது. வெவ்வேறு அளவுகளில் சுமார் 30 ஆயிரம் விண்கற்கள் பூமிக்கு அருகே உள்ள பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எதுவும் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது எனவும் கூறப்படுகிறது.
சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது முதலே விண்கற்கள் விண்வெளியில் எஞ்சியிருக்கின்றன என நாசா விளக்கம் அளித்துள்ளது. அண்மையில் ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுள்ள விண்கல் ஒன்றையும் நாசா கண்டறிந்துள்ளது. அது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2046ம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியுடன் மோத சிறிய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது நிச்சயம் பூமியுடன் மோதாது என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.