
ஒரு கிலோ இஞ்சியின் விலை கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இஞ்சி டீயின் விலையை பெரும்பான்மையான டீக்கடை உரிமையாளர் 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ இஞ்சியின் விலை 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சியை 250 ரூபாய் அல்லது 300 ரூபாய் என்று விற்பது இதுவே முதல்முறை. இது வரலாறு காணாத விலையேற்றம்.
தமிழ்நாட்டிற்கு ஈரோடு,தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து இஞ்சி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் இஞ்சி தட்டுப்பாடு அதிகம் காணப்படுகிறது. இதனால் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இது குறித்து டீக்கடை உரிமையாளர் ஐக்கிய ஆன்லைனுக்கு கூறுகையில், இஞ்சி அதிக அளவில் டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கடந்த மாதத்திற்கு முன்பு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி தற்போது 300 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 1 முதல் இஞ்சி டீயின் விலையை 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாக உயர்த்தி உள்ளோம். இதற்கு இஞ்சியோடு சேர்த்து மற்ற பொருட்களின் விலை உயர்வும் காரணம். இதனால் வாடிக்கையாளர்கள் இஞ்சி டீ கேட்டுப் பெறுவதை குறைத்துள்ளனர்.
மேலும் இஞ்சி டீக்கு மட்டுமல்ல பலவகையான உணவு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை பன்மடங்கு அதிகமாகவே உள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்கள் விலை உயர்த்தப்படும் அபாயம் உள்ளது.