உங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் ரூபாய் 50,000 உதவித்தொகையை பெற முடியும்.
பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூக நலன் மற்றும் மக்கள் உரிமை துறை மூலமாக தமிழக அரசு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்கொலையை தடுக்கவு,ம் பெண்களுக்கு கல்வி தகுதியை அதிகரிக்கவும் இந்த திட்டம் முதன்மையாக தொடங்கப்பட்டது.
ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் ரூபாய் 50,000 உதவித்தொகையை பெற முடியும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கு தல ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தால் இந்த திட்டத்தில் உங்களால் பயன்பெற முடியாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அந்த மூன்று குழந்தைகளுக்கும் உதவித் தொகை கிடைக்கும். மூன்று குழந்தைக்கும் ரூ. 25,000 வீதம் மொத்தமாக ரூ. 75,000 கிடைக்கும்.
ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு குழந்தையின் பெயரில் ரூபாய் ஐம்பதாயிரம் டெபாசிட் செய்யப்பட்டு அதற்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். நிதியுதவியாக பெறப்படும் மொத்த தொகையும் அந்த குழந்தையின் பெயரில் தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ஜாயிண்ட் அக்கவுண்ட் (Joint Account) ஓபன் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகையாகவே (fixed deposit) டெபாசிட் செய்யப்படுகிறது. எனவே, பணம் கையில் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான ரசீது நகல் பெற்றோரிடம் வழங்கப்படும்.
இந்த வைப்புத் தொகையை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையும் புதுப்பிக்க (renewal) வேண்டும். அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும், வைப்புத் தொகை மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து முதிர்வுத் தொகையாக அந்த பெண் குழந்தையின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும். மேலும், பெண் குழந்தையின் கல்விச் செலவுகளை ஈடுசெய்யும் விதமாக, 6வது ஆண்டு வைப்புத்தொகையில் இருந்து ஆண்டுதோறும் ரூ. 1800 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
அதேபோல், முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத்தம் ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருந்தால், சிறப்பு அனுமதியின் பேரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனித் தனியாக ரூ. 25,000 வழங்கப்படும். அவர்களுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறையே பின்பற்றப்படும்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான தகுதிகள் என்ன?
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டியது கட்டாயம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. அதேபோல், எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தந்தெடுக்கவும் கூடாது. குழந்தையின் பெற்றோர்களில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும்.உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையங்களில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்
வருமான சான்றிதழ்
பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
பெற்றோரின் ஆதார் அட்டை
ரேஷன் கார்டு
சாதிச் சான்றிதழ்
கருத்தடை சான்றிதழ் (Sterilization Certificate)
இருப்பிட சான்றிதழ்
திருமணச் சான்றிதழ்
குடும்ப புகைப்படம்
ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ் (no male child certificate)
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு அருகில் உள்ள பொதுச் சேவை மைத்திலேயே விண்ணப்பிக்கலாம் அல்லது நீங்கள் வசித்து வரும் வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் (Block Development Office) மூலமும் விண்ணப்பிக்கலாம். அங்கு சென்று பெண் குழந்தை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினால் விண்ணப்பப் படிவம் ஒன்றை கொடுப்பார்கள்.
அதை வாங்கி தேவையான தகவல்கள் அனைத்தையும் தவறில்லாமல் நிரப்ப வேண்டும். பிறகு, இணைக்க வேண்டிய ஆவணங்களின் அசல்களை விண்ணப்பத்துடன் இணைத்து BDO அதிகாரியிடம் கொடுத்துவிடுங்கள். அதை பெற்றுக்கொண்ட அதிகாரி உங்களுடைய ஆவணங்களின் அசல்களை ஸ்கேன் செய்துவிட்டு திருப்பி உங்களிடமே கொடுத்துவார்கள். உங்களுடைய விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2 மாதம் கழித்து BDO அலுவலகத்தில் தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வைப்புத்தொகை டெபாசிட் செய்ததற்கான அசல் ரசீது உங்களுக்கு வழங்கப்படும். அதில், சமர்ப்பிக்கும் தேதி, நேரம் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் போன்ற முக்கிய விவரங்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். அந்த ரசீதியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த ரசீது இருந்தால் தான் 5 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கவும், முதிர்வு தொகையை எடுக்கவும் முடியும்.