ரஷ்ய அகதிகள் : அண்டை நாடுகளுக்குப் படையெடுப்பு!

ரஷ்ய அகதிகள் : அண்டை நாடுகளுக்குப் படையெடுப்பு!

-ஜி.எஸ்.எஸ்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ரஷ்ய – உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனிலிருந்து பல லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அண்டை நாடுகளான ஜெர்மனி, போலந்து உட்பட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இப்படி உக்ரைனை விட்டு அந்நாட்டு மக்கள் வெளியேறுவது உலகம் முழுக்க அனைவரும் அறிந்ததுதான்!

ஆனால் ரஷ்யாவிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது பலரும் அறியாத சங்கதி. ஆம்.. சென்ற வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் ரஷ்யாவை விட்டு வேறு நாடுகளுக்கு இப்படி அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். என்ன காரணம்?!

சுமார் 64 சதவிகிதம் ரஷ்யர்கள் தாங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேறுவதாக கூறியிருக்கிறார்கள்.  உள்​ளூரில் உள்ள தங்கள் சொத்துக்களை எல்லாம் கிடைக்கும் விலைக்கு விற்று விட்டு இப்படி செல்பவர்கள் பலர்.  அதேபோல போக வேண்டும் என்று விருப்பப் பட்டாலும் பொருளாதாரக் காரணங்களினால் வெளியேற முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் நிறைய.

இப்படி ரஷ்யர்கள் வெளியேறுவது அந்த நாட்டின் தலைமை குறித்து அவர்களுக்குள்ள வெறுப்பையும் உணர்த்துகிறது என்றும் கூறலாம்.

அர்மீனியா, ஜார்ஜியா, துருக்கி ஆகிய நாடுகளில் இவர்கள் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள்.  முக்கியமாக விசா தேவையில்லாத ஜார்ஜியா நாட்டுக்கு இவர்கள் முன்னுரிமை தருகிறார்கள்.  முப்பதாயிரத்துக்கும் அதிகமான ரஷ்யர்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது ஜார்ஜியா.

புடின் ரஷ்யத் தலைவராக 2000-ம் வருடத்தில் ஆனபோது லட்சக்கணக்கில் ரஷ்யர்கள் அந்த நாட்டை விட்டு சென்றதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.  2012-ல் நடைபெற்ற தேர்தலில் (இதில் எக்கச்சக்கமான ஏமாற்று வேலைகள் நடந்ததாக கூறப்படுகிறது) மீண்டும் புடின் ரஷ்யாவின் தலைவராக பிடின் பொறுப்பேற்றபோது, தங்கள் சுதந்திரமும் உடைமைகளும் பறிபோகலாம் என்ற பயத்தில் பலர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்கள்.  மனித உரிமைகள் இல்லாத நாடு ரஷ்யா என்று வெளியேறிய பலர் கருத்து தெரிவித்தனர்.  பொருளாதாரத்தில் நலிவடைந்ததும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது.

அரசியல் சூழலும் ஒரு முக்கிய காரணம்.  கடந்த சில வருடங்களாக ரஷ்யாவை விட்டு செல்பவர்களில் அதிகமாக இளைஞர்களும் நடுத்தர வயது மக்களும் இருக்கிறார்கள்.  இவர்களில் பலரும் நிறையப் படித்தவர்கள் வேறு.  ரஷ்யாவை விட்டு வெளியேறுபவர்களில் 36 சதவிகிதம் பேர் முதுநிலைக் கல்வியை முடித்தவர்கள் அல்லது ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டவர்கள்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு கையில் ஒரே ஒரு சூட்கேசை சுமந்தபடி வெளிநாட்டு எல்லைகளுக்கு அருகே செல்லும் பேருந்துகளில் வரிசையில் நிற்பவர்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

காரணம் – இந்தப் போருக்குப் பிறகு ரஷ்யாவின் பொருளாதார நிலை பெரிதும் சரிந்து விடும் என்றும் இந்த போரின் காரணமாக பல நாடுகளின் அரசியல் நோக்கு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி விடும் என்றும் கணிசமானவர்கள் கருதுகிறார்கள்.

இனி ரஷ்யா முன்பு போல் இருக்காது என்று அவர்கள் கருதுகிறார்கள். ரஷ்யா மீது மேலை நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததை தொடர்ந்து ரஷ்ய ரூபிள் மதிப்பு கணிசமாக சரிந்து விட்டது.  ஐகியா, ஆப்பிள், நைக் போன்ற மேலை நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிட்டன

போருக்கு எதிராக ஊர்வலம் சென்ற ஏழாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டு ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  கணிசமான செய்தி சேனல்கள் முடக்கப்படுகின்றன.   இன்ஸ்டாகிராமில் உக்ரைன் போருக்கு எதிராக ஒரு வாக்கியத்தை பதிவு செய்த ஆசிரியை பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

உக்ரைனைக் குறிவைத்து தாக்கும் ரஷ்ய ராணுவம் அடுத்ததாக உள்ளூர் மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் என நம்புகிறார்கள் – இப்படி வெளி நாடுகளுக்குச் செல்பவர்கள்!

பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள விமானங்களின் இருக்கைகள்  இப்போது சீக்கிரமாக நிரம்பி விடுகின்றன.  இந்த நாடுகள், தங்கள் நாடுகளின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி விமான சர்வீஸ்கள்  ஒன்றுக்கு நான்காக தங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

ரஷ்யப் பொருளாதாரம் விரைவிலேயே தனது மனித முதலீட்டை (ஹியூமன் கேப்பிடல்) இழந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

ஆப்பிள், நெட்பிளிக்ஸ் போன்றவை ரஷ்யாவில் இயங்குவதை நிறுத்தி கொண்டுவிட்ட நிலையில் சீனாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தொழில்நுட்பத்துறையில் இறங்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்குத் தோன்றியிருக்கிறது.   ஆனால் இது இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் ஏற்றதல்ல என்கிற எண்ணமும் வலுப்பெற்று வருகிறது.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரஷ்யர்கள் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு பிற நாடுகளுக்குச் சென்று விட்டார்கள் என்கிறது ஐநா சபை.  பல நாடுகளின் எல்லையில் நீண்ட வரிசையில் கார்கள் நின்று கொண்டிருக்கின்றன.  அதிகபட்சம் சுமக்கும் வரை தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்கிறார்கள்.  அங்கு இப்படி வந்து சேரும் 'அகதிகளை' தற்காலிக கூடாரங்களில்  தங்க வைக்கிறார்கள். பின் வாகனங்களில் பல்வேறு நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.  தொழில்நுட்பக் கல்வியில் மேம்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆக தற்போதைய போரினால் பாதிக்கப்பட்டிருப்பது ராணுவத்தினர் மட்டுமல்ல பொதுமக்களும் தான்.  உக்ரைன் மக்கள் மட்டுமல்ல,  ரஷ்ய மக்களும் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com