
கிரீஸ் நாட்டில் ஆட்டு மந்தை ஒன்று கிலோ கணக்கான கஞ்சா செடிகளை மேய்ந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் போதை வஸ்துவான கஞ்சா செடி முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகளில் மருத்துவத்திற்காக கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதி உள்ளது. பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அந்நாடுகளில் கஞ்சா வளர்க்கப்படுகிறது. இருப்பினும் அத்தகைய கட்டுப்பாடுகளை மீறி ஏதாவது அசம்பாவித சம்பவம் அங்கு நடந்து விடுகிறது. அப்படிதான் கிரீஸ் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் என்றதும் மனிதர்கள் கஞ்சா செடிகளை திருடி விட்டார்கள் என நினைக்க வேண்டாம். மனிதர்களுக்கு பதிலாக பசியில் அங்கு சுற்றித்திரிந்த ஆடுகள் மருத்துவக் காரணங்களுக்காக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை முற்றிலுமாக மேய்ந்துவிட்டன. ஆடுகள் தின்ற கஞ்சா செடியின் அளவு 100 கிலோ வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
மருத்துவக் காரணங்களுக்காக பயிரிடப்பட்ட கஞ்சா என்பதால், இவை பெரிய கிரீன்ஹவுஸ் ரூமில் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் வளர்க்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட டேனியல் புயலால் ஆடுகளையும் அதன் அருகிலேயே மேய விடாமல் அடைத்து வைத்துள்ளனர். ஆடுகள் கஞ்சா செடிகளை மேய்ந்தது யாருக்கும் முதலில் தெரியவில்லை. ஒரு நாள் திடீரென ஆடுகள் எழும்பி துள்ளி குதித்து வித்தியாசமாக நடந்து கொண்டது. விடாமல் ஒலி எழுப்புவது, டான்ஸ் ஆடுவது என பல சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் உடனடியாக கஞ்சா செடிகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கே 100 கிலோ அளவிலான கஞ்சா செடிகள் மாயமானதைக் கண்டு அதிர்ந்துபோனார். அதன் பிறகு தான் ஆடுகள் கஞ்சா செடிகளை மேய்ந்து காலி செய்தது தெரியவந்துள்ளது.
கஞ்சா செடிகளை விலங்குகள் சாப்பிட்டு காலி செய்தது இது முதல்முறை அல்ல. கடந்த நவம்பரில் உத்தரப்பிரதேசம் மதுரா மாவட்டத்தில், போலீஸ் சேமிப்பு நிலையத்தில் இருந்த, குற்றவாளிகளிடம் இருந்து பிடிபட்ட 500 கிலோ கஞ்சாவை, எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறி நீதித்துறையை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் குறிப்பிடத்தக்கது.