ஆந்திராவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!

ஆந்திராவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!

விசாகபட்டிணத்திலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கோதாவரி விரைவு ரயில் மெட்சே ஜில்லா, அங்குஸாபூர் ரயில் நிலையத்தின் அருகில் தடம் புரண்டது. ஆறு ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து நழுவிச் சரிந்தன என்று தகவல்.

தடம் புரண்ட ரயில்பெட்டிகள் முறையே எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4 மற்றும் எஸ் எல் ஆர், அதோடு ஒரு பொது ரயில் பெட்டியுமாக மொத்தம் ஆறு ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருக்கின்றன. தடம் புரண்ட ரயில்பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்ற முடியுமா என சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏற்ற முடியாவிட்டால் தடம் புரண்ட அந்த 6 பெட்டிகளை மட்டும் நீக்கி விட்டு மீதமுள்ள ரயில் பெட்டிகளை திருப்பி அனுப்பும் விதமாக சீரமைப்பு வேலைகளில் ரயில்வே ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று அதிகாலை சுமார் 6.15 மணிக்கு இந்த விபத்து நடந்ததாகத் தகவல் வந்தது ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை ஆராய்ந்து திடீரென இந்த ரயில் பெட்டிகள் தடம் புரளக் காரணம் என்ன? எனப் பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளைப் பரிசோதித்ததில் அவற்றின் சக்கரங்களில் ஒன்று ரயில் தண்டவாளத்தின் உட்புறமாகவும் மற்றொன்று தண்டவாளத்தின் வெளிப்புறமும் சரிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எல் ஹெச் பி கோச்களாக இருந்ததால் மட்டுமே ரயிலில் சேதமேதுமின்றித் தப்ப முடிந்தது என அந்த ரயிலை இயக்கிய லோகோ பைலட் தெரிவித்தார்.

பொதுவாக இது போன்று விரைவு ரயில்கள் திடீரெனத் தடம் புரளும் போது உள்ளிருக்கும் லோகோ பைலட் அதை உணர்ந்து விபத்தைத் தடுக்கும் பொருட்டு உடனடியாக சடன் பிரேக் இடும் போது ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறிக் கொள்ள சேதாரங்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இம்முறை அப்படியான சேதாரங்கள் எதுவும் நிகழாதது அதிசயம் என்கிறார்கள்.

தடம் புரண்ட எஸ்1, எஸ்2, எஸ்3 ரிஸர்வேசன் கோச்சில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். அவர்களை பத்திரமாகத் திருப்பி அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

தற்போது தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் வரை அந்த வழியாகச் செல்லும் பிற ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

காஜிப்பேட்டில் இருந்து செகந்திராபாத் வழியாகச் செல்லக் கூடிய சில ரயில்களுக்கு பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதில் பயணிகளிடையே எவ்வித உயிர்சேதமோ, படுகாயங்களோ எதுவும் இல்லை எனத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com