

தங்கத்தின் விலை ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த நிலையில், "உண்மையான விலை உயர்வு இன்னும் வரவில்லை, இனிமேல்தான் இருக்கிறது" எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வரும் காலங்களில் தங்கத்தின் விலை இன்னும் பெரிய அளவில் உயரும் எனவும் கூறுகின்றனர்.
தங்கம் விலை வரலாறு காணாத நிலையில் உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 57,200 (கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்த விலை, குறுகிய காலத்திலேயே அதாவது ஜனவரி 22-ஆம் தேதியே ரூ. 60,000 என்ற எல்லையைக் கடந்தது. அன்றிலிருந்து தங்கம் விலை தினமும் படிப்படியாக உயரத் தொடங்கி, ஒரு புதிய உச்சத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
இந்த அதிரடி உயர்வு அக்டோபர் மாதத்தில் உச்சத்தை எட்டியது. ஜெட் வேகத்தில் விலை அதிகரித்ததன் விளைவாக, அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ. 97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது.
அந்தநேரத்தில் தங்கம் விலை விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சந்தையில் விலைச் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நவம்பர் 5-ஆம் தேதி ஒரு பவுன் ரூ. 89,440-க்கு விற்பனையானதுடன், கடந்த மாதம் ரூ. 88,000 என்கிற நிலைக்குக் குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தது. இருப்பினும், இந்த விலை வீழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. ரூ. 88,000 என்கிற அளவைத் தொட்ட பிறகு, தங்கம் விலை மீண்டும் 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. பழையபடி விலை ஏற்றம் கண்டு வருவதால், தற்போது தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.ஜனவரி 1 2026ல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.96,580க்கு விற்பனையானது
வரலாற்றில் இல்லாத அளவாக தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. இதனால் புது ஆண்டு பிறந்ததில் இருந்தாவது தங்கம் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நடப்பு ஆண்டிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 காரட் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, புதிய உச்சம் தொட்டது.ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,06,240-க்கும் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.15,000 அதிகரித்து ரூ.3,07,000-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.307-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தங்கம் விலை நிபுணர்கள் கூறுகையில்,’தங்கம் விலை உண்மையான உயர்வு இன்னும் வரவில்லை. இன்னும் பெரிய உயர்வை நோக்கித்தான் தங்கம் விலை இருக்கும். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை இன்னும் அதிகமாக இருக்கும். அதாவது தங்கத்தின் விலை உயர்வை விட வெள்ளியின் விலை உயர்வு சதவிகிதத்தில் அதிகமாகவே போகும்’எனக் கூறுகினறனர்.
ஒவ்வொரு நாடும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன.. இந்த போர்கள் நிச்சயமாக இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கலாம்.இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்திலும்,வெள்ளியிலும் மேலும் முதலீடு செய்வதை தவிர்க்க முடியாது எனவும் கூறப்படுகிறது.மேலும், வெள்ளி முதலீட்டு பொருளாக இல்லாமல் பல தொழில்களுக்கு ஒரு மூலப்பொருளாக பயன்பட்டு வருவது விலை உயர்வுக்கு கூடுதல் காரணமாக உள்ளது.