

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவார பாலகர் தங்க சிலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது.
பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தங்கம் திருடிய வழக்கில் கோயில் தந்திரி ராஜீவ் கண்டரூவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் தந்திரி ராஜீவ் கண்டரூ கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை, கேரளா மற்றும் பெங்களூருவில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகள் ஆகியவற்றை செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்பனிடும் பணிக்கு முன்பு 43 கிலோ இருந்த தங்கத்தின் எடையில் 4.5 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ரசாயன கலவையை பயன்படுத்தி தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் அம்பத்தூர் உள்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 21 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேவசம்போர்டு முன்னாள் தலைவரான பத்மகுமார் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை தங்க திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தேவசம்போர்டு நிர்வாகிகள் பலரை கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு. இந்நிலையில் இன்று நடைபெறும் அமலாக்கத்துறை சோதனையின் முடிவின் போது மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மீட்கப்பட்ட தங்கத்தைக் காட்டிலும், கூடுதலாக தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என சிறப்பு புலனாய்வு குழு சந்தேகிக்கிறது. ஏற்கனவே சபரிமலை அபிஷேக நெய் விவகாரத்தில் ரூ.16 லட்சம் முறைகேடு நடந்துள்ள நிலையில், தங்கத் திருட்டு விவகாரமும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.