
நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரிப்பால் நகை பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று நகை தான். முந்தைய காலம் முதலே தங்கத்திற்கு மதிப்பு அதிகம். அதனால் தான் வரதட்சணையாக தங்க நகை கொடுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தப்படியாக நகைகடைகளில் தான் கூட்டம் கூடுகிறது. அப்படி தங்கத்தின் மீதான ஈர்ப்பு யாரை தான் விட்டு வைத்தது. மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த பொக்கிஷம் மேலும் பெரிய பொக்கிஷமாகதான் மாறி வருகிறது. மதிப்பு குறைந்த பாடே இல்லை. எப்படியாவது தங்கம் வாங்கிவிடலாம் விலை அதிகரிப்பதற்குள் என்று மக்கள் நினைக்கும் நேரத்தில் அதை விட எட்டாக்கனியாக மாறிவிடுகிறது தங்கத்தின் விலை. இதனால் நகை வாங்கமுடியாமல் பலரும் திணறி வருகின்றனர். சிலரோ சீட்டு கட்டி நகையை சேமிக்கும் பழக்கத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
அன்றைய காலத்தில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பல சவரன் வாங்கிய பெண்களுக்கோ தற்போது ஜாக்பாட் தான். ஏனென்றால் அன்றைய காலத்து நகைகளை இன்றைக்கு விற்றால் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம். அந்த அளவிற்கு நகையின் விலை உச்சம் தொட்டு வருகிறது,
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி, தங்கத்தின் விலை வரலாறு காணாத ஒரு புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 790-க்கும், ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்து 320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.105 உயர்ந்து, ரூ.7 ஆயிரத்து 810-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.840 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 ரூபாயும், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,905க்கும், ஒரு சவரன் ரூ,63,240 விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.63,440 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெறும் 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ,1,800 உயர்ந்துள்ளது.
ஒரு வருடத்தில் தங்கம் விலை எவ்வளவு மாற்றம் அடைந்திருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..
ஜனவரி 1 2024 - ரூ.47,280
மார்ச் 28 2024 - ரூ.50,000
ஏப்ரல் 8 2024 - ரூ.53,000
ஏப்ரல் 19 2024 - ரூ.55,000
செப்டம்பர் 24 2024 - ரூ.56,000
அக்டோபர் 31 2024 - ரூ.59,640
ஜனவரி 22 2025 - ரூ.60,200
பிப்ரவரி 5 202 - 63,240
பிப்ரவரி 6 2025 (இன்று) - ரூ.63,440
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை சராசரியாக சவரனுக்கு ரூ.16,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியே போனால் சாமானிய மக்கள் நகையை பார்க்க முடியாத சூழலே உருவாகும் என சொல்லப்படுகிறது.