

2026ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை முன்பெப்போதும் இல்லாத வகையில் அதிரடி உயர்வைக் கண்டு வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சில நேரங்களில் ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரக்கணக்கில் விலை உயர்வது நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கட்டுக்கடங்காத விலை உயர்வால், திருமண விசேஷங்கள் மற்றும் முக்கியத் தேவைகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தங்கம் வாங்க முடியாத சூழல் நிலவுவதால், சாமானிய மக்களின் பட்ஜெட் முழுமையாகச் சிதைந்து போயுள்ளது. சந்தையின் இந்த ஏற்ற இறக்கமான போக்கு எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கண்ணிமைக்கும் நேரத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) காலையில் சவரன் ரூ. 1,16,960-க்கு விற்கப்பட்ட நிலையில், அன்றே மாலையில் மீண்டும் விலை உயர்ந்து ரூ. 1,18,000-ஐ எட்டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையில் மாற்றமில்லாத நிலையில், இன்று மீண்டும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்து வரும் நிலையில், நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 26) புது உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 1,20,200 என்ற வரலாற்றுச் சாதனை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 15,025-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குவிந்து வருவதே, உள்நாட்டில் இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,20,200-க்கு விற்பனையாகும் நிலையில், வெள்ளியின் விலையும் புதிய சாதனை படைத்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 10,000 உயர்ந்து ரூ. 3,75,000 என்ற இமாலய விலையை எட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) அன்று காலையில் வெள்ளி ஒரு கிராம் ரூ. 355-க்கும், மாலையில் ரூ. 365-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விலையில் மாற்றமில்லாத நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.