

தமிழகத்தில் இன்று (ஜனவரி 05) தங்கம் மற்றும் வெள்ளி விலை முன்எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. காலையில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் 640 ரூபாய் அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 080 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் காரணமாக தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டிப் பயணிப்பது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. காலையில் ஒரு கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 266 ரூபாயாக உள்ளது.