பொன்விழா காணவிருக்கும் அண்ணா மேம்பாலம் புதுப்பிப்பு!

பொன்விழா காணவிருக்கும் அண்ணா மேம்பாலம் புதுப்பிப்பு!

சென்னையின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம் ஆகும். சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி இந்த மேம்பாலத்தைக் கட்டி முடித்தார். 1973ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த மேம்பாலத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் நினைவாக அவரது பெயரையே சூட்டினார் கருணாநிதி.

தினமும் லட்சக்கணக்கான வாகனங்களைக் கடக்கச் செய்யும் இந்த மேம்பாலம் வரும் ஜூன் 1ம் தேதி ஐம்பது ஆண்டுகளைக் கடந்து பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. ஆண்டுகள் ஐம்பதைக் கடந்தாலும் அசராமல் கம்பீரமாக நிற்கும் இந்த பொன்விழா மேம்பாலத்தை அழகுபடுத்தி புதுப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பால சீரமைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டு உள்ளது.

அண்ணா மேம்பால சீரமைப்புப் பணிகளாக, பாலத்தின் கீழ் உள்ள 80 தூண்களும் GRC பேனல்களைப் பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்து அழகுபடுத்தும் பணியில் புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தனி கவனம் செலுத்தி அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி வருவதோடு, அதிகாரிகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுகளில் தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்கள் ஆகியவற்றை சிற்பங்கள் மற்றும் ஓவிய வடிவில் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளும் அமைக்கப்பட உள்ளன. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என எட்டு இடங்களில் அழகிய தூண்கள் நிறுவப்பட உள்ளன. இவை தவிர, மேம்பாலத்தின் அருகே புல் தரைகளில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதியின் பொன்மொழிகள், தமிழ் எழுத்துக்கள், தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

எத்தனையோ மேம்பாலங்கள் சென்னை நகருக்கு அழகும் பொலிவும் தந்தாலும் அரை நூற்றாண்டைக் கடந்து பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம் தலைநகருக்குத் தனிச் சிறப்புதான். தினம் தினம் ஆயிரம் சுமைகளைத் தாங்கி அற்புதமாய் விளங்கும் இந்த அண்ணா மேம்பாலம் பேரறிஞர் அண்ணாவின் நினைவுகளைத் தாங்கி நிற்பது தமிழர்களாகிய அனைவருக்கும் சந்தோஷம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com