பிரதமர் மோடி தலைமையில்தான் நல்லாட்சி நடக்கிறது: அஜித் பவார்!

பிரதமர் மோடி தலைமையில்தான் நல்லாட்சி நடக்கிறது: அஜித் பவார்!

“நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். அதன் காரணமாகவே மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணியில் சேர்ந்தேன்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிரடி திருப்பமாக புதிய துணை முதல்வராக அஜித்பவார் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த நிலையில் ஆளும் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணியில் சேர்ந்தது ஏன் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

அஜித்பவார் கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது தலைமையின்கீழ் நாடு முன்னேறி வருகிறது. வெளிநாடுகளிலும் பிரதமர் மோடி பிரபலமாகி வருகிறார். ஒவ்வொருவரும் அவரது தலைமையை பாராட்டி வருகின்றனர். மகாராஷ்டிரத்தில் வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. இணைந்து செயல்பட விரும்புகிறேன். அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

நான் துணை முதல்வராகவும் எனது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர். மேலும் சிலர் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். எங்கள் கட்சிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் ஆகும். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பெறுவதற்கு போராடுவோம் என்றார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் இதனால்தான் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாகவும் மேலும் காங்கிரஸ் கட்சியுடன் பவார் கூட்டு வைத்துள்ளது கட்சியில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக அதிரடி திருப்பமாக அஜித் பவார், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுடன் மும்பையில் உள்ள தமது வீட்டில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை சென்ற அவர், அங்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஆளுநர் ரமேஷ் முன்னிலையில் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர், பா.ஜ.க. மற்றும் சிவசேனைக்கு இடையே உறவு முறிந்த சமயத்தில் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இருவரும் முறையே முதல்வர் மற்றும் துணை

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் காலை நேரத்தில் அதிரடியாக இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால், அந்த அரசு 80 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் அஜித்பவாரால், தனது கட்சியில் பிளவு ஏற்படுத்த முடியவில்லை.

இதைத் தொடர்ந்து சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணையுடன் மகாராஷ்டிர விகாஸ் அகாதி என்ற கூட்டணியை ஏற்படுத்தி முதல்வராக பதவியேற்றார்.

எனினும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனை கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பியதால் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வரானார். துணை முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்றார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அது முடிந்த சில மாதங்களில் அதாவது அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீதேந்தி அவ்ஹாத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com