ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

மிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தியை கூட்டுறவுத் துறையானது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். 

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையிலும், இலவசமாகவும் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலன்களை அடைந்து வருகின்றனர். இவ்வாறாக அரசு வழங்கும் பொருட்களால் பலருடைய வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. 

அதே சமயத்தில் பண்டிகை நாட்களில் பொங்கல் பரிசு, தீபாவளி பரிசு போன்ற நிதி உதவிகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய நன்மைகளை வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள் மற்றும் செல்போன் எண்ணை மாற்றுதல் போன்றவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இவ்வாறு குடிமக்களின் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஓராண்டுக்குள் கழிப்பறை வசதி செய்வதற்கான மாதிரி நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

மற்றொரு முக்கிய அறிவிப்பு என்னவென்றால், சில நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைதாரர்களை அவர்களின் விருப்பமில்லாத வேறு சில பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக, நீண்ட காலமாக புகார்கள் எழுந்து வருகிறது. அரிசி, பருப்பு போன்ற பொருட்களுடன் சோப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்களும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கூடுதல் பொருட்களை வாங்கவில்லை என்றால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் சிலர் பீதியைக் கிளப்பி கிராமப்புற பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்குவார்கள். இதனால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக செலுத்த வேண்டிய இன்னல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறை இதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது. 

இனி நியாயவிலைக் கடைகளில் விருப்பமில்லாத பொருட்களை பொதுமக்களை வாங்கச் சொல்லி ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் அரசு விநியோகிக்கும் பெற்ற பொருட்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இதையும் மீறி கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தற்போது வெளிவந்திருக்கும் இந்த செய்தியானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com