

இந்தியாவை தலையிடமாகக் கொண்ட ஏர்டெல், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 15 நாடுகளில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு, உலக அளவில் முதல் மூன்று மொபைல் ஆபரேட்டர்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் நெட்வொர்க்குகள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் Rich Communication Services (RCS) எனும் அதிநவீன செய்தியிடல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது. இது ஏர்டெல் நெட்வொர்க்கில் AI மூலம் இயங்கும் ஸ்பேம் பாதுகாப்பு உயர்தர போட்டோ/ வீடியோ பகிர்வு மற்றும் மேம்பட்ட பாதுகாப்புடன் பாதுகாப்பான செய்தியிடும் அனுபவத்தை வழங்குகிறது. இது பாரம்பரிய எஸ்எம்எஸ்(SMS)க்கு மாற்றாக அமையும்.
ஏர்டெல் நெட்வொர்க் நுண்ணறிவு மற்றும் கூகுளின் தொழில்நுட்பம் இணைந்து டிஜிட்டல் மோசடிகள் மற்றும் அதிக அளவிலான ஸ்பேம் தகவல்களை தடுத்து வலுவான பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்:
வாட்ஸ்அப் போன்ற அனுபவம்: உயர்தர புகைப்படங்கள், வீடியோக்கள், மெசேஜ் ரியாக்ஷன்கள் மற்றும் சாட் அம்சங்களை இனி 'Google Messages' செயலி மூலமே பெறலாம்.இது மில்லியன் கணக்கான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக பாதுகாப்பான வர்த்தக மெசேஜிங்(business messaging) அனுபவத்தை வழங்குகிறது. இது வணிக வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு அவசியமான நீடித்த வாடிக்கையாளர் உறவுகளுக்கு வழிவகுக்கும்.
AI ஸ்பேம் பாதுகாப்பு: தகவல் தொடர்புகளை விளம்பரம் அல்லது பரிவர்த்தனை என வகைப்படுத்தி, அதற்கேற்ப கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பயனர்களின் DND விருப்பங்களை மதிக்கவும், வாடிக்கையாளர்களின் சாதனங்களில் ஸ்பேம் வணிகச் செய்திகள் வருவதை தடுக்கவும், பல அடுக்கு அச்சுறுத்தல் கண்டறிதல் அடுக்கு மூலம் தீங்கிழைக்கும் டொமைன்களை வடிகட்டவும் கூகுள் மற்றும் ஏர்டெல்லின் AI இயங்கும் ஸ்பேம் வடிப்பான்கள் தனிப்பட்ட அனுப்புனர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தடுப்பதன் மூலம் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
வணிகத் தொடர்பு: இது வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் தொடர்புகொள்ள வழிவகுக்கும்.
பயனர்களின் DND (Do Not Disturb) விருப்பங்களை மதிக்கும் வகையில், தகவல்கள் விளம்பரம் அல்லது பரிவர்த்தனை என வகைப்படுத்தப்படும். பல அடுக்கு அச்சுறுத்தல் கண்டறிதல் (Multi-layer threat detection) மூலம், தீங்கிழைக்கும் இணையதள இணைப்புகள் (Domains) தானாகவே வடிகட்டப்படும்.
கடந்த 18 மாதங்களில் அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளில் ஏஐ தலைமையிலான தலையீடுகள் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடியை சமாளிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதுவரை 71 பில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும், 2.9 பில்லியன் ஸ்பேம் செய்திகளையும் தடுத்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் அதன் நெட்வொர்க்கில் நிதி இழப்புகள் 68.7% குறைந்துள்ளன என்றும் கூறியுள்ளது.
இந்த கூட்டு முயற்சி ஏர்டெல் பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன தகவல் தொடர்பு முறையை இந்தியாவில் வழங்க உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கி வரும் நிலையில் தற்போது ஏர்டெல்லும் இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.