
தமிழகத்தில் ரேபிடோ எனப்படும் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “சில விஷயங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பைக் என்பது தனி நபர் பயன்படுத்தும் வாகனம். வாடகைக்கு விடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. பைக் டாக்ஸிகளை பயன்படுத்த கூடாது என்பது தமிழக அரசின் நிலை. காவல்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், பல மாநிலங்களில் பேருந்து சேவை கட்டணம் உயர்ந்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு ஏதும் செய்யப்படவில்லை. 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக ஜெர்மன் நிறுவன பங்களிப்புடன் 2400 பேருந்துகளை வாங்க உள்ளோம். அதேபோல், அகவிலைப்படி உயர்வு குறித்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என அவர் கூறினார்.