தமிழகத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் அரசுக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
தமிழகத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக, தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. தென்னை மரம் ஏறும்போது உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால், ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையாக அவரின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. நிரந்தரமாக, பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சம், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் ரூபாய் வரை பெற்று கொள்ளலாம்.
அந்த வகையில் தென்னை மரம் ஏறுபவர்கள் தங்களை காப்பீடு செய்து கொள்ள வருடந்தோறும் ரூ.94 மட்டுமே செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 75% தொகையான ரூ.281-யை தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் 940 தொழிலாளர்களும், நடப்பு ஆண்டில் இதுவரை 100 தொழிலாளர்களும் இந்த காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள் தென்னை வளர்ச்சி வாரியத்தின் http://www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தங்கள் பெயர், ஆதார் எண், கைபேசி எண், இருப்பிட முகவரி, பிறந்த தேதி, வாரிசு நியமனம் உள்ளிட்ட விபரங்களுடன், தங்கள் பகுதி வட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தங்கள் பங்குக்கான காப்பீட்டுத் தொகையை வரைவோலையாகவோ, கூகுள் பே அல்லது பேடீஎம் அல்லது போன்-பே மூலமாகவோ செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.