அரசு தான் செலவிட வேண்டும்!
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் சேர முன்னுரிமை அளிக்குமாறு இயக்குநர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் படித்த பள்ளிக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்பதை கதைக்கருவாக வைத்து பள்ளிக்கூடம் என்னும் திரைப்படத்தை தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். பால்யகாலத்து நினைவுகளை போற்றும் படமாக பள்ளிக்கூடம் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 'நம்ம ஸ்கூல்' என்னும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் எந்தவொரு பள்ளிக்கும் பணமாகவோ, பொருளாகவோ நன்கொடை தரமுடியும். சம்பந்தப்பட்ட பள்ளியை தத்தெடுத்து, அதன் கட்டமைப்பை மேம்படுத்த நம்மால் உதவுமுடியும்.
'நம்ம ஸ்கூல்' அமைப்பின் தலைவராக யாரை நியமிப்பது என்பது சர்ச்சையாகியுள்ள நிலையில், தங்கர்பச்சன் இன்னொரு விவாதத்தையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
பணக்காரர்களிடம் நிதிபெற்று திட்டத்தை செயல்படுத்தினால் திட்டம் முழு வெற்றியடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியை அரசே தன்னுடைய செலவில் செய்து தரவேண்டும். இதற்காக பணக்காரர்களை நம்பியிருக்கக்கூடாது என்கிறார், தங்கர் பச்சான்.
மேலும், சாதாரண கூலித் தொழிலாளி கூட தன்னுடைய பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் சேர முன்னுரிமை தரப்படவேண்டும்.
அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் தங்களுடைய பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் சிறப்பு இடஒதுக்கீடு தரவேண்டும் என்கிறார் அவர்.
தங்கர் பச்சன் கூறுவது போல நடப்பதெல்லாம் சாத்தியமா? அதற்கு முதற்கண் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் தனியார் பள்ளிகளைப் போல் அமையவேண்டும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகள் அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். அதைவிடுத்து, அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? என்கிறது மறுதரப்பு வாதம்!