என்எல்சி விவகாரத்தை முன்வைத்து இன்று பாமக நடத்திய போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது. இது குறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "என்எல்சி விரிவாக்கத்துக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது முக்கியமானது. இதை செய்தால்தான் சுரங்கத்துக்கான மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். இந்தப் பணிகளை மேற்கொண்டால்தான் மின்சார உற்பத்தி தடைபடாமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால்தான் மின்சாரம் நமக்குக் கிடைக்கும்.
இது குறித்து, கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலமாகவும், வேளாண் துறை அமைச்சர் மூலமாகவும் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2006 முதல் 2016 வரை எடுக்கப்பட்ட 104 ஹெக்டேர் பரப்பளவில் வரக்கூடிய 300க்கு மேற்பட்ட உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே ஒரு ஏக்கருக்கு 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், கூடுதலாக 10 லட்ச ரூபாய் கருணைத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட 83 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 400 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 2.6 லட்ச ரூபாய் நீங்கலாக, மேலும் 14 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட இருக்கிறது.
2000 முதல் 2005 வரை எடுக்கப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவில் வரக்கூடிய 100 நில உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே ஏக்கருக்கு 2.4 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கியதைத் தவிர்த்து, தற்போது 6 லட்ச ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. மெத்தமாக 1088 நில உரிமையாளர்களுக்கு 75 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 16 முதல் 26 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களுக்கு கருணைத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பரவனாறு மாற்றுப் பாதை அமைக்கும் போது, பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர் இழப்பீட்டுத் தொகையாக, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் பெற்று அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது ஏக்கருக்கு 23 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்ச ரூபாயாக இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், என்எல்சியில் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, அந்தப் போராட்டம் அறவழியில் நடக்கக்கூடிய போராட்டம் என்பதை தாண்டி, வன்முறையாக வெடித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்தப் பிரச்னையை அமைதியாக அனுகினாலும், வெளியூரில் இருந்து வரக்கூடியவர்கள், அரசியல் உள்நோக்கத்துடன், தூண்டுதல் காரணமாக செய்த இந்தச் செயலால் வன்முறை ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறையால் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. வன்முறையை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறி இருக்கிறார்.