

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவாக அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட, இக்கட்சிக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாகவே உள்ளன. இதனால் தவெக அந்த கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வந்தது.
இந்நிலையில் இன்று மாலையில் சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட இடதுசாரிகள், 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்தன.
தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதன் மூலமாக தவெக ஆட்சியமைக்க 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6.30 மணியளவில் ஆளுநரை 3-வது முறையாக சந்தித்து பேசிய நிலையில் விஜய் முதல்வராவது உறுதியானது. அதனை தொடர்ந்து நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நாளை விஜய் பதவியேற்பு விழா கிடையாது என கவர்னர் மாளிகை கூறியதாக NDTV செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை விஜய் நிரூபிக்காததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கவர்னர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காங்., CPI, CPM கட்சிகள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்துள்ள நிலையில், 116 உறுப்பினர்களின் ஆதரவே இதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.