‘சதி ஆலோசனைக் களமாக மாறி வரும் ஆளுநர் மாளிகை’ அமைச்சர் தங்கம் தென்னரசு!

‘சதி ஆலோசனைக் களமாக மாறி வரும் ஆளுநர் மாளிகை’ அமைச்சர் தங்கம் தென்னரசு!

பாஜக முன்னாள் தலைவர் தீனதயாள் உபாத்தியாயாவின் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘திராவிடம் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது’ என்று பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்தப் பேச்சு குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர்…

"தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தவிர, மற்ற அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது முதல், சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார். திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. அதனால் திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 'திராவிடம் பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசி இருக்கும் அவர், எந்த வகையில் திராவிடம் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால் விரிவாக விளக்கம் அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்வதை வெறும் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

திராவிடம் என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம், பண்டித அயோத்திதாசர் , சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கருணாநிதி போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல். சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம், மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, இந்தியக் கூட்டாட்சி ஆகியவை திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். இதனை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கோட்பாடு. இதனை தனது ஆட்சியின் நெறிமுறையாக வகுத்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதைத்தான் தனது இலக்காக முதல்வர் குறிப்பிடுகிறார். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது?

‘திராவிட இயக்கம் கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே’ என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு தமிழ்நாடு என்ற சொல் பிடிக்கவில்லை என்பதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக்கொள்ள முடியாது. அவருக்கு திராவிட இயக்கம் பிடிக்கவில்லை என்பதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக்கொள்ளப் போவது இல்லை. இந்த மாநிலத்துக்கு ஆளுநராக வந்தவர், ஆக்கபூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக்கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். சனாதன, வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரச்சாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். ஆளுநர் பதவி, என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்து அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதி ஆலோசனை மண்டபமாக, கிண்டி ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதுதான் உண்மை.

‘ஆளுநர் ஆர்.என்.ரவி எங்களுக்கு ஒரு பிரச்சாரக் கருவிதான். இங்கே இருந்து அவரை மாற்றிவிடக் கூடாது. அவர் இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும்' என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com