‘ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது’: உச்ச நீதிமன்றம் பரபரப்பு!

‘ஆளுநர்கள் அரசியல் செய்யக் கூடாது’: உச்ச நீதிமன்றம் பரபரப்பு!

காராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஆட்சி அமைத்து செயல்பட்டு வந்தது. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனியே பிரிந்து செயல்பட்டதால் அக்கட்சி பிளவுபட்டது. அதனால் பாஜக உதவியுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமைந்தது. இதனால் சிவசேனா கட்சியும், அக்கட்சியின் சின்னமான வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உத்தவ் தாக்கரே எப்போது ராஜினாமா செய்தாரோ அப்போதே இந்த வழக்கு முடிந்து போன விஷயமாகி விட்டது’ என்று ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தமது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

அதைக் கேட்டு குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “அது முடிந்து போன ஒன்று அல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிடாமல் இருந்திருந்தால் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்திருக்க மாட்டார்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, ‘நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், உத்தவ் தாக்கரே யாரை எதிர்த்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டாரோ அவர்களோடு சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்ததாக சொலிசிட்டர் ஜெனரல் துஷாந்த் மெஹ்தா தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் எவ்வாறு கூறலாம்?’ என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர், ‘ஆளுநர் அரசியல் அரங்கத்துக்குள் நுழையக் கூடாது’ என்றும் கூறினார். மேலும், ‘இந்த வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று என்பதால் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்றும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com