அரசு தந்த வீடு, அலுவலகம் காலி, இண்டர்நெட், தொலைபேசி இணைப்புகளும் துண்டிப்பு - தொடரும் நெருக்கடிகள்; மீள்வாரா, ராகுல் காந்தி?

அரசு தந்த வீடு, அலுவலகம் காலி,  இண்டர்நெட், தொலைபேசி இணைப்புகளும் துண்டிப்பு -  தொடரும் நெருக்கடிகள்; மீள்வாரா, ராகுல் காந்தி?

2019ல் கோலாரில் பேசிய பேச்சுக்கு தினந்தோறும் ராகுல் காந்திக்கு நெருக்கடிகள் தொடர்கின்றன.  சர்ச்சை பேச்சு தொடர்பாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அறிவிப்பு வெளியானதும் அவரது எம்.பி பதவி பறிபோனது. டெல்லியில் இருந்த அவரது வீட்டையும் காலி செய்யும் படி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வயநாட்டில் உள்ள அலுவலகமும் முடக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு தரப்படும் நெருக்கடிகள் குறித்தும், அதானி விஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்றும் கூறி ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரையும் நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஏற்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்திக்கு எதிராக வந்த அறிவிப்புகள், காங்கிரஸ் எம்.பிக்களை கோபப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களில் இறங்க வைத்தன.

ராகுல் காந்தி மீது ஆளுங்கட்சியினர் காட்டி வரும் ஆவேசமும் மக்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது என்கிறார்கள்.  தேசிய அளவிலும், பல மாநிலங்களிலும் பா.ஜ.க இன்னும் வலுவான செல்வாக்கோடு இருந்தாலும் ராகுல் காந்தியின் மீது  ஏனோ பா.ஜ.கவுக்கு பதட்டமும், பயமும் இருப்பதை சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப் படுத்தி வருகின்றன.

பட்ஜட் கூட்டத்தொடர் ஒட்டுமொத்தமாக முடங்கியதற்கு காரணமாக காங்கிரஸ் எம்.பிக்களை ஆளும் தரப்பு குறை சொல்கிறது.  உண்மையில் இரு தரப்பினரும் தினந்தோறும் ஒரு போராட்ட வடிவை கையிலெடுத்து, அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணிகள் முடங்கியிருந்தன. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று கூட எந்தப்பணியும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவரது கூட்டணிக் கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்திருக்கிறார்கள்.  கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்தை அவமதித்தார்கள்.  ஒரு தனி நபருக்காக காங்கிரஸ் கட்சியும் அவர்களது ஆதரவாளர்களும் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

பா.ஜ.க தரப்பு தங்களுடைய தரப்பை நியாயப் படுத்தினாலும், இன்னொரு பக்கம் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளின் உக்கிரத்தை குறைத்த பாடில்லை. அவரது எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை உடனடியாக காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது தொகுதியில் மக்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட அலுவலகமும் முடக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தரப்பட்டிருந்த அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்பு, இணைய வசதி உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் இந்தியாவின் அதிகார பீடமாக இருந்து, இன்றும் எதிர்க்கட்சிகளின் ஒரே முகமாகவும் பிரதமர் வேட்பாளராகவும் உள்ள ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால், அப்பாவி மக்களுக்கு பா.ஜ.க அரசு என்னவெல்லாம் நெருக்கடிகள் தரமுடியும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். 

அடுத்தடுதது பா.ஜ.க அரசு செய்யும் தவறுகள், ராகுல் காந்தி தேசிய அளவில் விஸ்வரூபமெடுக்க காரணமாக அமைந்து வருகின்றன. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு அணுகுவதற்கு இவையெல்லாம் எங்களுக்கு உதவும் என்று சத்திய மூர்த்தி பவன் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com