ஆளுநர் ஆர்.என்.ரவியால்தான் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்: அமைச்சர் பொன்முடி!

ஆளுநர் ஆர்.என்.ரவியால்தான் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம்: அமைச்சர் பொன்முடி!

மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்த பின்னர் பட்டமளிப்பு விழா நடத்தி டிகிரி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். புரொவிஷனல் சான்றிதழுக்கு குறிப்பிட்ட காலவரையறை அளவு மட்டுமே அங்கீகாரம் உண்டு. அதன் பின்னர் மாணவர்கள் வேலை வய்ப்புக்கோ அல்லது உயர்கல்வி பெறவோ முயற்சிக்கும் போது உயர்கல்வி நிறுவனங்கள் டிகிரி சான்றிதழை மட்டுமே அங்கீகாரமாகக் கருதும். மாணவர்களின் பெற்றோர்களும் கூட டிகிரி சான்றிதழ் பெறுவதையே கெளரவமாகக் கருதுவார்கள். அது ஒரு பெருமை. எனவே அது உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாக வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து தோராயமாக 9,29,542 பேர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று டிகிரி சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.

சென்னை பல்கலைக் கழகத்தில் கடைசியாக 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக 16.05.2022 ல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்னமும் பட்டம் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. 2022 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் தேர்ச்சி பெற்ற மாணவர்களைத் தவிர மீதமுள்ள 12 பல்கலைக் கழக மாணவர்களுக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் தமிழ்நாடு அரசு அல்ல. ஆளுநர் மட்டுமே முழுமையான காரணம். அவர் பட்டமளிப்பு விழா நடத்த எப்போது தேதி கேட்டாலும் அளிப்பதற்கு நாங்கள் தயார். எனவே ஊடகங்கள் சார்பாக நான் ஆளுநர் அவர்களிடம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்தி முடிக்க கோரிக்கை வைக்கிறேன். இதில் தாமதத்துக்கான மற்றொரு காரணமாக நான் சிறப்பு விருந்தினர்கள் அழைப்பதற்கான ஆளுநரின் பரிந்துரையையும் கருதுகிறேன். ஏனெனில் ஆளுநர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க நினைப்பது மத்திய அமைச்சர்களையே!

அவர்களது தேதிகள் கிடைப்பது தாமதமாவதால் தான் ஆளுநரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உரிய தேதி அளிக்க முடியவில்லை என்று கருதுகிறோம். சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தமிழகத்திலேயே நிறைய தகுதி வாய்ந்த ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள் இருக்கிறார்கள்,தமிழறிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆளுநர் வட இந்தியாவில் இருந்து சிறப்பு விருந்தினர்களை அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார். அதனால் ஆன காலதாமதம் தான் இது.

ஆளுநர் பட்டமளிப்பு விழா நடத்த நேரம் ஒதுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை நிச்சயமாக அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com