இயற்கைகள் அனைத்தும் செயற்கையின் பிடியில் சிக்கிக்கொண்டு தடுமாறும் இக்காலத்திலும் நாம் மனது வைத்தால் நூறு வயது வரை வாழலாம் என்று சொல்கிறார் இங்கிலாந்தில் வாழும் நூறு வயதுப் பாட்டி ஒருவர். அவர் சொல்வதை கேட்டால், நாமும் கூட நூறு வயது இல்லை எனினும், வாழும் காலம் வரைக்கும் ஆனந்தமாகவும் ஆரோக்கியத்துடனும் வாழலாமே? அந்தப் பாட்டி சொல்லும் விஷயம் உண்மையில் யாரும் யோசிக்காத ஒன்று.யார் அவர்? அப்படி என்ன ரகசியத்தை அவர் சொன்னார்? பார்ப்போம்.
ஆலிவ் வெஸ்டர்ன் மேன் என்ற இங்கிலாந்து பாட்டி சமீபத்தில் அன்பான நண்பர்கள் உறவினர்கள் சூழ தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் தன் வாழ்நாளின் ரகசியம் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“தெரியாத மனிதர்களை தவிர்ப்பதன் மூலமும், அவர்களுடன் பேசாமல் இருந்ததன் மூலமும், தான் இவ்வளவு காலம் வாழ்ந்ததாகச் சொல்கிறார் ஆலிவ். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை மறைந்த கணவர் சாமுடன் கழித்துள்ளார் இவர். பயணங்களின் பிரியரும் எழுத்தாளருமான சாமுடன் சென்று பயணங்களில் தான் அதிக காலத்தை செலவழித்துள்ளார்.
அதற்கு முன்னர் ஆலிவ் நர்சரி பள்ளி ஒன்றில் பள்ளி செவிலியராகப் பணி புரிந்துள்ளார். அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் நர்சரி குழந்தைகளுடன் மிக கனிவாகவும் அன்புடனும் பழகி வந்துள்ளார். குழந்தைகளிடம் சேர்ந்து குதூகலமாக விளையாடியது தனது மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவியது என்றும், தான் நீண்ட நாட்கள் வாழ இதுவும் காரணம் என்கிறார்.
இவர் சொல்லும் இந்த இரண்டு விசயங்களும் மிகச்சரியானதே. நமக்கு எதிராக செயல்பட்டு, நம் மனதை நோகடிக்கும் மனிதர்களோடு உள்ள உறவை அல்லது பழக்கத்தை விட்டு விட்டாலே வாழ்வில் நிம்மதி கிடைக்கும். இன்னும் சரியாக சொல்வதென்றால் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.
அடுத்து உலகின் பிரச்னைகள் படியாத, கள்ளம் கபடமற்ற குழந்தைகளோடு நாமும் குழந்தையாக கலந்து அவர்களுடன் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் களிக்கும் போது நம்மையறியாமலே நமக்குள் தொற்றும் உற்சாகம் நம் சோர்வை விரட்டுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது மருத்துவர்களும் ஒப்புக்கொண்ட உண்மைதானே.
ஆலிவ் பாட்டி பேச்சைத் தட்டாமல் கேட்டோமானால் நிச்சயம் நமக்கும் நூறு வயதுதான்.