கண்ணாடி விரியனைக் கடித்துக் குதறி நன்றியை நிரூபித்த வேட்டையன்!!

குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் துறந்த ஜீவன்
கண்ணாடி விரியனைக் கடித்துக் குதறி நன்றியை நிரூபித்த வேட்டையன்!!
Published on

பொதுவாகவே நாய் மிகுந்த நன்றியுள்ள ஜீவனாக நம்மிடையே வலம் வருகிறது. வீட்டு நாய்கள் என்றாலும் வீதிகளில் திரியும் நாய்கள் என்றாலும் அது ஒரு முறை நாம் போடும் பிஸ்கட்டுக்கே நன்றியுடன் தினம் நம்மிடம் வந்து வாலாட்டி அன்பைத் தெரிவிக்கும். எத்தனை உதவிகள் செய்தாலும் அதை மறந்து பார்த்தால் கூட யாரென்று கேட்கும் குணம் கொண்ட மனிதர்கள் நடுவே விசுவாசம் கொண்ட நாய்களை சீராட்டி வளர்க்கும் கருணையுள்ள மனிதர்களை உண்மையில் கடவுளும் காப்பாற்றுவார் என்பதற்கு சாட்சி ஈரோட்டில் இந்த சம்பவம்.

        ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சொக்கநாத பாளையம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பன் எனும் விவசாயி. பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் பாதுகாப்பு முன்னிட்டு நாய்களை வளர்ப்பது வழக்கம். அப்படி இவரும்தன் வீட்டில் கலப்பின நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

        இந்த நாய்க்கு சந்திரமுகியின்  பிரபலமான வேட்டையன் எனும் பெயரை  ஆசையாக வைத்தார். இந்த நிலையில் தை பிறப்பதால் நஞ்சப்பன் குடும்பத்தினர் நெல் வயலில் உள்ள வரப்புகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விடாமல் வேட்டையன் குறைக்கும் சப்தம் கேட்டு நஞ்சப்பன் ஏதோ விபரீதம் என்று உணர்ந்து சப்தம் வந்த இடத்தில் போய்ப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். அங்கு ஒரு பெரிய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நாயினால் கடிபட்டு துடிதுடித்து இறந்து கிடந்தது. அதன் அருகில் வேட்டையன் நாயும் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு பதறினார். உடனே வேட்டையனை காரில் சென்னிமலை கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு இருந்த கால்நடை மருத்துவர் சுரேஷ் வேட்டையனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது.

       வேட்டையனின் இழப்பு கண்டு நஞ்சப்பன் குடும்பம் கடும் வேதனைப்பட்டது. தன்னை வளர்த்த குடும்பத்தினரை பாம்பிடமிருந்து காப்பாற்ற  வீரத்துடன் போராடி பாம்பைக் கொன்றதுடன் தன் உயிரையும் இழந்து தியாகியான வேட்டையனின் விசுவாசமான நன்றியைப் பாராட்டி வேட்டையனுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை தந்தனர் அப்பகுதியில் உள்ளவர்கள். வாயில்லா ஜீவன்களுக்குத்தான் தெரிகிறது நன்றியும் விசுவாசமும் வீரமும். வாயுள்ள நாமோ மற்றவரின் துன்பங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்த்து விலகி விடுவது வெட்கத்துக்குரியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com