தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயரந்து கொண்டே போவது மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த கவலையான விஷயம் என்பதை இனி மாற்றிக் கொள்ள வேண்டும். விலையுயர்ந்த நகை இருந்தால்தான் வாழ்க்கைக்கு சோறு கிடைக்கும் என்று அந்த எலிக்குக் கூடதெரிந்துள்ளது வியப்பைத் தருகிறது. ஆம்... நகையை அபேஸ் செய்த எலி பற்றிய செய்திதான் இது.
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் ஒரு பிரபலமான நகைக்கடை உள்ளது இந்த கடையில் விதவிதமான விலை உயர்ந்த ஏராளமான நகைகள் விற்பனைக்கான பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம்போல் கடையை மூடி பூட்டு போட்டுச் சென்றனர் ஊழியர்கள். மறுநாள் காலையில் கடையை திறந்த ஊழியர்கள் நகைகளை சோதனை செய்த போது ஒரு நெக்லஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எப்படி மாயமாயிற்று என்பதை அறிய கடையில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவில் கடையில் புகுந்த எலி ஒன்று அந்த நெக்லஸை லாவகமாக வாயால் கவ்விச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியுடன் வியப்பும் அடைந்தனர். யாரிடம் புகார் செய்வது என்று குழம்பிய நிலையில் கடை உரிமையாளர் இருக்க. எலி நகையைத் தூக்கிச் செல்லும் காணொளிப்பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.
எலி நெக்லஸை தூக்கிச் செல்லும் வீடியோவை பார்த்தவர்கள் “நகைத்திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதைத்தான் கலிகாலம் என்று சொல்கிறார்களோ? எப்படியோ எலி கையில் சிக்கிய நெக்லஸைத் தேடுவது இனி காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது ஹாஸ்யமான நிச்சயம்.