ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகத் தாய்மொழி தினமாக அனுசரிக்கப்படுகிறது. வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் பிப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு முதல் இந்நாளை உலகத் தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்நாளில் தாய் மொழிக்காகப் போராடியவர்களை நினைவுகூறும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. தாய்மொழி தினத்தை ஒட்டி தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தில், 'தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம், உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம் நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!' என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் வாழ்த்துப் பதிவில், 'மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில், 'இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம். தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்! தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்குதான் அதிகம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தாய்மொழி தினம் குறித்து ஒரு வாழ்த்துக் கவிதையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 'எழுத்தும் நீயே… சொல்லும் நீயே… பொருளும் நீயே… பொற்றமிழ்த் தாயே… அகமும் நீயே… புறமும் நீயே… முகமும் நீயே… முத்தமிழ்த் தாயே… மாறும் உலகில் மாறாதியங்கும் மாட்சி படைத்தனை நீயே… உனக்கு வணக்கம் தாயே… எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே' என்று கூறியுள்ளார்.