ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: தேசிய தீர்ப்பாயம் ரெடி! ஆனால், சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும்?

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: தேசிய தீர்ப்பாயம் ரெடி! ஆனால், சாமானிய மக்களுக்கு என்ன கிடைக்கும்?
Published on

பட்ஜெட் அறிக்கை வெளியான பின்னர், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு ஜி.எஸ்.டி கவுன்சில் சனிக்கிழமையன்று கூடியது. ஜி.எஸ்.டி தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்கு மாநில அமர்வுகளைக் கொண்ட தேசிய தீர்ப்பாய நெறிமுறையை உருவாக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதெல்லாம் சரி, சாமானியர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது?

பான்மசாலா பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது. நாடெங்கும் பான் மசாலா பொருட்களின் உபயோகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போதைப் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்குவதில் தொடங்கி, சகலருக்கும் விநியோகிப்பது வரை பல்வேறு விதிமீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாகி, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு சவாலை ஏற்படுத்தியது. அவற்றையெல்லாம் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் பான் மாசாலா மீது கூடுதல் வரியை விதிப்பதன் மூலம் பயன்பாட்டை பரவலாக குறைக்க முடியும் என்று அரசுகள் நினைக்கின்றன.

பான் மசாலாவுக்கு கூடுதல் வரி விதிப்பால், இனி விலை உயரும். பான் மாசாலா மூலப் பொருட்கள் தொடங்கி, பான் மசாலா சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையும் உயரக்கூடும். உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு நீதிமன்றம் விலக்கு அளித்திருக்கிறது. கூடுதல் வரி விதிப்பின் மூலமாக மட்டுமே பயன்பாட்டை குறைக்க முடியும்.

நீண்ட நாள் கோரிக்கையாக ஜி.எஸ்.டி கவுன்சிலில் முன்வைக்கப்பட்டு வந்த நாட்டு வெல்லத்திற்கு வரி நீக்கப்பட்டிருக்கிறது. பேட்டை வெல்லம் உள்ளிட்ட திட வடிவிலான வெல்ல பொருட்களுக்கு முன்னர் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அவற்றை முற்றிலும் நீக்குவதற்கு கவுன்சில் ஒப்புக்கொண்டிருக்கிறது. இனி வெல்லம் மட்டுமல்ல நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலையும் சற்றே குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே பதப்படுத்தப்பட்டு, பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். பென்சில் ஷார்பபனர்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர சில அன்றாட அலுவலக பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் மீதான வரி குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்கள் தொடர்ந்து ஏறி வருகின்றன. குறிப்பாக சிமெண்ட் விலைக்கான வரி 28 சதவீதத்திலிருந்து குறையும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிமெண்ட் தொடர்பான எந்தவித அறிவிப்பும் வரவில்லை.

ஒரே வகைப்பாட்டில் உள்ள பொருட்களுக்கு வெவ்வேறு வரி விதிக்கப்படுவதால் பல்வேறு மட்டங்களில் குழப்பங்கள் நிலவுகின்றன. ஜி.எஸ்.டியை இன்னும் எளிமைப்படுத்தியாக வேண்டும். அதுவே சாமானியர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய நன்மை என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com