
ஜிஎஸ்டி என்பது வரியல்ல; ஏழைகள் மீதான தாக்குதல். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு யோசனைக்கு மூல காரணம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். ஒரே ஒரு வரி விதிப்புமுறை இருக்க வேண்டும். அது எளிமையாக மக்களுக்கு சுமையில்லாதவாறு இருக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் எண்ணமாக இருந்தது.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி, அதாவது ஆளுங்கட்சி கூட்டணி கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. முற்றிலும் வேறுபட்டது. அதை மோசமாக வடிவமைத்துவிட்டது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாத்னா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அவர்கள், சிறிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக இருக்கலாம், கடைகளை நடத்துபவர்களாக இருக்கலாம்.
லட்சக்கணக்கான இதுபோன்ற நிறுவனங்களில், மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் பணியாற்றுகிறார்கள். உண்மையில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பவர்கள் அவர்கள்தான்.
பாஜக ஆட்சியில், இத்தகைய நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவர்கள் சிறு, குழு, மத்தியத் தர நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி என்பது வரியல்ல. அது சிறு, குழு, நடுத்தர நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம். இது ஏழைகள் மீதான தாக்குதலாகும்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் இருந்தார். அந்த அரசு, மிகப் பெரிய தொழிலதிபரான அதானிக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறிய அளவில் கடைகளை நடத்துபவர்கள் போன்றோருக்கு ஆதரவாகவே செயல்பட்டது.
இதன் காரணமாகவே, பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கமல்நாத் அரசை மோசமான வழியில் கைப்பற்றினார்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.