சினிமா பாக்ஸ் ஆபிஸை விட முக்கியமானது ஜி.எஸ்.டி கலெக்ஷன் ரிப்போர்ட். ஆனால், சமூக வலைத்தளங்களில் பாக்ஸ் ஆபிஸ் போல் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதில்லை. தினசரி நாளேடுகளில் ஏதேனும் ஒரு மூலையில் இடம்பெறும் செய்தியாகவே சாமானிய மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி இழப்பீடு என்பது அரசியல் ரீதியாக தமிழ்நாட்டில் முக்கியமான பிரச்னையாக பேசப்படுகிறது.
எந்த வித இருப்பும் வைத்துக்கொள்ளாமல் ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசு, மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கிவிட தயாராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வாரம் அறிவித்திருந்தார். ஜூன் 2022 முதல் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை 16,982 கோடி ரூபாய். இவற்றை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை தராமல் மத்திய அரசு வைத்திருப்பதாக முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கும். ஆனால், தமிழ்நாட்டை விட அதிக தொகை வைத்துள்ள மகராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை பற்றிய விவாதங்கள் இருந்ததில்லை.
இன்றைய நிலையில் மகராஷ்டிரா, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மத்திய அரசு தந்தாகவேண்டும. இதுவரை அக்கௌண்டன்ட் ஜெனரல் அலுவகத்தின் ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை ரிலீஸ் செய்து வருகிறது.
கடந்த ஓராண்டாக ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நடப்பாண்டில் இதுவரை கூடுதலாக 12% வசூல் ஆகியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்ட்ட முடிவுகளின் படி, சிக்கல்களை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள தாமதக் கட்டணம் பாதியளவாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.