அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி பலி!

அரிக்கொம்பன் யானை தாக்கிய காவலாளி பலி!
Published on

அரிக்கொம்பன் யானை தாக்கி பலத்த காயங்களுடன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலாளி பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்ந்து கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்கவும் முடியாமல், வன பகுதியில் விரட்டவும் முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

இந்த அரிக்கொம்பன் யானை கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள மேகமலை, மணலாறு, இரவங்களாறு உள்ளிட்ட பகுதியில் சுற்றி திரிந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது .

கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த மே 27-ம் தேதி காலை திடீரென புகுந்த யானை, வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேக்கடி வனப்பகுதிக்கு அருகாமையில் குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்தபோது வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் வனப்பகுதிக்குள் அரிக்கொம்பனை விரட்ட முயன்றனர்.

இந்நிலையில் கம்பம் நகர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரிக்கொம்பன் யானை இடித்ததில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பால்ராஜை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு வனத்துறையின் சார்பில் அமைச்சர் மதிவேந்தன் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

தற்போது சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரிக்கொம்பன் யானை தாக்கியதில் 20 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் கம்பத்தை சேர்ந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com