
கிண்டி சிறுவர் பூங்கா மறுசீரமைப்புக்காக வரும் திங்கட்கிழமை முதல் ஆறு மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்துவது மட்டுமின்றி டிக்கெட் கவுன்டர், சிற்றுண்டிச்சாலை, வாகன நிறுத்துமிடம், பார்வையாளருக்குத் தோதான சுற்றுப்புறங்கள், உலகத்தரம் வாய்ந்த தியேட்டர் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய சில புதிய உள்கட்டமைப்பு வேலைகளையும் செய்யவிருக்கிறார்களாம்.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த திங்கள் முதல் தொடங்கவிருக்கின்றன என வனவிலங்கு காப்பகத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஊடகங்களிடம் தெரிவித்தார். வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் இதே போன்று உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிண்டி பூங்காவிற்கு 28,000 சதுர அடியில் தனி பறவைக் கூடம் மற்றும் 2 ஏக்கருக்கு மேலான வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. தற்போதுள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிகள் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஷோ ஆகியவை உலகத் தரம் வாய்ந்த திரையரங்குகள் அமைப்பட்டு அவற்றில் அப்படியே தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .
இந்த பூங்காவிற்கு ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். ஆகவே மேலும் மக்களை கவரும் வகையில், இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1,050 பள்ளிகளைச் சேர்ந்த 68,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் அடிப்படை மிருகக்காட்சிசாலை வெளிப்பாடு (Basic Zoo Exposer)திட்டத்தில் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்ட பல முதலைகள், பாம்புகள், பறவைகள் மற்றும் ஆமைகள் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காக்களைக் கண்டு, அவற்றில் இருந்து உத்வேகம் பெற்ற நம் நாட்டு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் உயிரினங்களைக் காப்பதற்கான அடிப்படைக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு உயிரினத்தின் அடைப்புக்கு வெளியேயும், QR குறியீடுகள் மற்றும் ஆடியோ விளக்கங்களுடன் ஒரு ஊடாடும் பலகை அமைக்கப்படும். பூங்காவில் அழகுக்குகாக தேவையான இடங்களில் பாதைகள், நீரூற்றுகள் மற்றும் இயற்கை தோட்டங்கள் சேர்க்கப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு ₹20 கோடியை
அனுமதித்துள்ளது, மேலும் ₹10 கோடி ரூபாய் நிதியானது CSR நிதியைப் பயன்படுத்தி சேர்க்கப்படும்.
- என்று அவர் தெரிவித்தார்.