கின்னஸ் சாதனை படைத்த விளம்பரப்பலகை..மழையும் இசையும் சேர்ந்த அதிசயம்!

Guinness Record for Taj Mahal Tea Billboard
Guinness Record for Taj Mahal Tea Billboard

ரு பிரபல தேயிலை பிராண்ட் வைத்த விளம்பரப்பலகைக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்டஸ் என்பது மனித சாதனைகள் மற்றும் இயற்கை உலகின் உச்சநிலை ஆகிய இரண்டின் உலக சாதனைகளையும் ஆண்டுதோறும் பட்டியலிடும் ஒரு புத்தகம்.

இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் இந்த பட்டியலை 1955ல் இருந்து உலக சாதனைகளை வெளியிட்டு வருகிறது. தாஜ் மஹால் டீ விளம்பரத்திற்காக விஜயவாடா ரயில் நிலையம் எதிரில் வைக்கப்பட்ட ஒரு விளம்பரப்பலகைக்கு "உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஊடாடும் விளம்பர பலகை" என்ற அங்கீகாரம் கொடுத்துள்ளது கின்னஸ் நிறுவனம். கின்னஸ் உலக சாதனைகள் (இந்தியா மற்றும் APAC)  அதிகாரப்பூர்வ நடுவர் ஸ்வப்னில் தங்கரிகர் இந்த சான்றிதழை வழங்கினார்.

இந்த விளம்பரப்பலகையில் "சந்தூர்" என்ற இசைக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தேக்கரண்டி போன்ற குச்சிகளில் மழை நீர் நிரம்பி அவை கீழ் இறங்கி பலகையில் உள்ள சாரங்களில் பட்டு இசை உருவாகிறது. இந்த இசை ஹிந்துஸ்தானி சங்கீதத்தின்  "மேக் மல்ஹார்" என்ற ராகத்தை ஒத்து இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேகம் என்ற பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையான மேக் என்பதிலிருந்து இந்த பெயர் உருவானது. இந்த ராகம் பாடப்பட்ட பகுதியில் மழையை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

இயற்கை, தொழில்நுட்பம் மற்றும் இந்துஸ்தானி இசை இவற்றை கலந்து வழங்கும் இந்த விளம்பரப்பலகையை உருவாக்க 50 நிபுணர்கள் ஆறு மாதம் உழைத்தார்கள் என்கிறது இந்த விளம்பரப்பலகையை நிறுவிய தேயிலை நிறுவனம். 2,250 சதுர அடி பரப்புள்ள "மேக் சந்தூர்" எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த  விளம்பரப்பலகையில் 31 சாரங்கள் மற்றும் கரண்டிகள் உள்ளன. இவை மழையினால் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் ஒலி 'மேக் மல்ஹார்' ராகத்தை போல் இருக்க தௌஃபிக் குரேஷி என்ற இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர், தாள கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் தனது நிபுணத்துவத்தை அளித்துள்ளார்.

இந்த விளம்பரப்பலகையை நிறுவிய தேயிலை தயாரிக்கும் நிறுவனம் இந்த முயற்சி விஜயவாடா நகரத்திற்கு தாங்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டது என்றும் இந்த அமைப்பை அனைவரும் அனுபவிக்க விஜயவாடா வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. தேநீரோடு சேர்த்து இசையை கேட்க விஜயவாடா விஜயம் செய்வோம்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com