குஜராத் சட்டப்பேரவை 2 ம் கட்ட தேர்தல்! பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களிப்பு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 2-வது மற்றும் இறுதிக் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது.

குஜராத் தேர்தலில் தனது சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் இன்று வாக்களிக்கின்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று காலை ஆமதாபாத்தில் உள்ள ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் வாக்களிக்கிறார்.

Election
Election

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள அங்கூரில் இன்று காலை வாக்களிக்கிறார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் ஆமதாபாத்தில் உள்ள ஷிலாஜ் தொடக்கப்பள்ளியில் இன்று காலை வாக்களிக்கிறார்.

இந்த தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 285 சுயேச்சைகள் உள்பட 833 பேர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளிலும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன.

இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. அமைதியான முறையில் வாக்களிப்பதற்காக 14,975 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1.13 லட்சம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.

2-ம் கட்ட தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மாநில போலீசாருடன், துணை ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகிய பல விஐபி பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்களது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று வாக்களிக்கின்றனர்.

மாநிலத்தின் முக்கியமான ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், ஆம் ஆத்மி நிர்வாகிகள் என முக்கிய கட்சிகளின் பெரும் தலைவர்கள் மேற்படி தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இந்த சூறாவளி பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. . இதைத் தொடர்ந்து அந்த தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com