தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய குஜராத் - காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் நம்பர் ஒன்!

தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய குஜராத் - காற்றாலை மூலம் மின் உற்பத்தியில் நம்பர் ஒன்!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்திலிருந்த தமிழகத்தை குஜராத் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. 2023ம் ஆண்டு மே மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களில் படி குஜராத் மாநிலத்தில் காற்றாலை மூலம் பெறப்பட்ட மின் உற்பத்தியானது 10,416 மெகாவாட் என்றும் தமிழ்நாட்டில் பெறப்பட்ட மின்உற்பத்தி 10,125 மெகாவாட் என்றும் தெரியவந்திருக்கிறது.

காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள், மாநிலங்களின் நிலப்பரப்புக்கு ஏற்ற திட்டங்கள் என்பதால் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே வணிக ரீதியில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் டாப் 3 இடங்களை குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் வகித்து வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வதில் தமிழ்நாட்டை விட குஜராத் பல மடங்கு பின்தங்கியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் எற்பட்டு, இரு மாநிலங்களுக்கும் இடையே ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தின் உற்பத்தியோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டை குஜராத் முந்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் குஜராத்தில் காற்றாலைகள் அதிகளவில் நிறுவப்பட்டுள்ளன. மாநிலத்தின் மின் உற்பத்தி கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம், காற்றாலைகளை முதலீட்டிற்கான வாய்ப்பு பார்க்க ஆரம்பித்திருப்பதால் இரண்டாமிடத்திலிருந்து நகர்ந்து குஜராத் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் சவால்களால் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. காற்றாலைகளை பரவலாக நிறுவ இடம் கிடைக்காததும், முதலீடு செய்ய யாரும் முன்வராததும் தமிழகத்தில் காற்றாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

காற்றாலையில் மட்டுமல்ல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியிலும் குஜராத் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தானை விட இரண்டாயிரம் மெகாவாட் குறைவாக உற்பத்தி செய்து இரண்டாமிடத்தில் இருக்கிறது. கூடிய விரைவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விஷயத்திலும் தமிழ்நாட்டை முந்தியது போல் ராஜஸ்தானை முந்திவிடும் என்கிறார்கள். முதல் இரண்டு இடங்களை ராஜஸ்தானும் குஜராத்தும் பெற்றிருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தில் 18,125 மெகாவாட் உற்பத்தி செய்த தமிழ்நாடு உள்ளது. டாப் 5 லிஸ்ட்டில் தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடாகாவும் மகராஷ்டிராவும் உள்ளன.

புதிதாக மின் உற்பத்தியை பெருக்குவதில் தேசிய அளவில் குஜராத் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. 2023 ஆண்டில் இரண்டு மாதங்களிலேயே கூடுதலாக 1609 மெகாவாட் மின்உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் 857 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. கர்நாடாகாவால் 250 மெகாவாட், தமிழகத்தில் 205 மெகாவாட், ராஜஸ்தானில் 120 மெகாவாட் மின் உற்பத்தியை மட்டுமே அதிகரிக்க முடிந்திருக்கிறது. மின் உற்பத்தியை பொறுத்தவரை தமிழ்நாடு டாப் 3 பட்டியலில் இடம்பெற்றுவிடுகிறது. ஆனால், குஜராத் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com