ஆண்டவனை நம்புவோரில் இருந்து தன்னை மட்டுமே நம்பும் தன்னம்பிக்கையாளர்கள் வரை குருவை நம்பி ஆவலுடன் காத்திருப்பார்கள். காரணம் நவகிரகங்களில் முக்கியஸ்தரான “குருவைப் போல் கொடுப்பவர் இல்லை” என்பதால் ஞானசெல்வமான கல்வியிலிருந்து பொருட் செல்வமான பொன்வரை அனைத்தையும் நல்குபவர் குருபகவான் என்பது நம்பிக்கை. ”குருபார்க்க கோடி செல்வம்” என்று சொல்வார்கள் ஆன்றோர்களும் ஜோதிட வல்லுனர்களும். இப்படி சிறப்பு வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ராசிக்கு சென்று தங்குவார். அப்படி செல்லும்போது நம் பூர்வகர்ம பலன்களின் படி நன்மையையும் பாதிப்புகளையும் தந்து செல்வார். நம்பிக்கையுடன் குருவின் பாதங்களில் சரணாகதி அடைந்து நன்மைகளை நாமும் செய்தால் குருவும் நிச்சயம் நமக்கு நன்மையே அருளுவார்.
இப்படி சிறப்பு பெற்ற குருபகவான் இதுவரை இருந்த மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு குருபகவான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குரு தலங்களில் புகழ்பெற்ற ஆலங்குடி ஆபத்சகாயச்வரர் குரு பரிகார கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு இன்று குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நாளில் குரு பெயர்ச்சி விழா அதிவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று பெயர்ச்சி அடைவதையொட்டி இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா அதி விமர்சையாக நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் முடிவடைந்தது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருட்சிகம், மகரம், கும்பம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே ஒன்றாம் தேதிவரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
தூரத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியவில்லை எனினும் அருகிலுள்ள விருப்ப தெய்வங்களை சென்று வழிபடலாம். அத்துடன் நல்ல எண்ணங்களுடன் எளியவர்களுக்கு தானங்கள் செய்வதும் குருவின் அருளை எளிதாக பெரும் வழியே என்பதையும் நினைவில் கொள்வோம்.