ஆளுநர் ரவியால் தாமதமாகும் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு!

ஆளுநர் ரவியால் தாமதமாகும் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு!

டந்த அதிமுக ஆட்சியில் சென்னை, செங்குன்றம் பகுதியில் குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் குட்கா வியாபாரிகளிடம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை அதிகாரிகளான முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் லஞ்சம் பெற்றிருப்பதாக, குட்கா வியாபாரிகளின் டைரி மூலம் தகவல் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு 2014 முதல் 2016 வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்ததாக அவர்கள் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகியும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை அனுமதித்ததாக சிபிஐ அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அனுப்பிய கடிதத்துக்கு 2022ம் ஆண்டு ஜூலை மாதமே தமிழ்நாடு அரசு இசைவு தந்துள்ளது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குட்கா வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆளுநரின் அனுமதிக்காக 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அவருக்குக் கடிதம் எழுதியது.

தமிழக அரசு கடிதம் எழுதி 11 மாதங்களாகியும் ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு அனுமதி வழங்கவில்லை. அதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ரகுபதி, கடந்த மாதம் 5ம் தேதி ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். குட்கா முறைகேடு குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் அனுமதி தரவில்லை என வழக்கறிஞர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும், ‘ஆளுநரின் தாமதத்தால்தான் குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என சட்ட அமைச்சர் ரகுபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு அனுமதி தராததால், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மற்றும்  டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிபிஐக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவியின் இந்தத் தாமதத்தால் குட்கா ஊழல் வழக்கு விசாரணை முடங்கி உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக 11வது முறையாக சிபிஐ வாய்தா கோரியிருப்பதால் நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com