கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல்!

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் போதைப் பொருளான குட்கா பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்குத் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து குன்றத்தூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வாகனங்களில் மாற்றப்படுவதாக குன்றத்தூர் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குன்றத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் அதிரடியாகச் சென்ற போலீசார், திருமுடிவாக்கம் மயானம் அருகே சந்தேகத்துக்கிடமாக நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த நபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். ஆனால், போலீசாரால் அவர்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு வாகனங்களையும் சோதனை செய்ததில், அவற்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து அந்த ஏழு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அது குறித்து விசாரணை செய்ததில், அந்த வண்டிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 22 டன் குட்காவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இங்கிருந்து அருகிலுள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யவே அந்த ஏழு வண்டிகளும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்த போதைப்பொருள் வாகனங்களை விட்டுச்சென்ற நபர்கள் குறித்துக் கண்டறிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாகத் தேடி வருவதாக போலீசார் கூறுகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட இந்த குட்கா பெங்களூருவில் இருந்து மொத்தமாகக் கொண்டு வரப்பட்டு இரவு நேரங்களில் இதுபோன்ற பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com