நடுவானில் அரைகுறை ஆடையுடன் தகராறில் ஈடுபட்ட இத்தாலிய பெண்!

நடுவானில் அரைகுறை ஆடையுடன் தகராறில் ஈடுபட்ட இத்தாலிய பெண்!
Published on

சமீபகாலமாகவே விமானத்தில் பயணம் செய்வோர் சக பயணிகளிடம் முறைதவறி நடப்பது, விமானப் பணிப் பெண் குழுவினருடன் தகராறில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

நடுவானில் நடக்கும் இந்த அநாகரீகமான சம்பவங்கள் பற்றி அவ்வப்போது செய்திகளும் வெளிவருகின்றன.

சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் லக்கேஜ் வைப்பது தொடர்பாக இருவருக்கு இடையே மோதல் நடந்தது.

நியூயார்க்-தில்லி விமானத்தில் பெண் பயணி மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாரிஸ்-தில்லி ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி, பெண் பயணி இருக்கையில் இருந்த போர்வையின் மீது சிறுநீர் கழித்தது, மற்றொரு பயணி கழிப்பறையில் சிகரெட் புகைத்தது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றன.

நடுவானில் விமானம் பறக்கும்போது அவசரவழி கதவை திறந்த சம்பவமும் நடந்தேறியது. இரண்டு நாட்கள் முன்பு நாக்பூரிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் ஒருவர். விமானம் தரையிறங்க இருந்த சமயத்தில் அவசர வழிக் கதவை திறக்க முற்பட்ட செய்தியும் வெளியானது.

இந்த நிலையில் துபாயிலிருந்து மும்பை வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 45 வயதான இத்தாலிய பெண் பயணி பாவ்லா பெர்ருசியோ, நடுவானில் விமானக் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாகவும், விமானத்தில் அரைகுறை ஆடையுடன் வலம் வந்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாதாரண வகுப்பில் செல்லும் டிக்கெட் வைத்திருந்த அந்த பெண், பிஸினஸ் வகுப்பு இருக்கையில் அமர விரும்பினார். ஆனால், இதற்கு விமானக்குழுவினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், கோபத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். மேலும் அரை குறை ஆடையுடன் விமானத்தில் நடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் விமானம் மும்பையில் தரை இறங்கியதும் அந்த பெண் மீது புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

விமானத்தில் பயணிக்கும்போது கேப்டன், அந்த பெண்ணை எச்சரித்ததாகவும், ஆனால், அதையும் மீறி அப்பெண் முறைதவறி நடந்து கொண்டதாகவும், இதைத் தொடர்ந்து கொடுத்த புகாரின் பேரிலேயே அந்த பெண் விமானத்திலிருந்து இறங்கியவுடன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com