சென்னையில் சொத்துவரி குறையுமா என்று எதிர்பார்த்து பாதி பேர் வெயிட்டிங்!

சென்னை பெருநகர மாநகராட்சி
சென்னை பெருநகர மாநகராட்சி
Published on

சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துவரியை சரியான நேரத்தில் சரியான தொகை செலுத்துபவர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே உண்டு. பலர் கடைசி நேரத்தில்தான் கட்டுவார்கள். சிலர் பல ஆண்டுகளாக கட்டமால் இருக்கிறார்கள்.

சென்னையில் மொத்த மக்கள் தொகை, 67 லட்சம். ஆனால், அதில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் 13 லட்சம் பேர் மட்டும்தான். அதாவது 13 லட்சம் பேர் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துகிறார்கள்.

டிசம்பர் மாத இறுதியோடு, சொத்து வரியை செலுத்தியாக வேண்டும். ஆனால், இதுவரை பாதி பேர் மட்டுமே செலுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 7 லட்சம் பேர் இனிமேல்தான் கட்டவேண்டும்.

சொத்து வரி கட்டுமாறு சென்னை மாநகராட்சி செய்யாத விளம்பரமில்லை. என்ன செய்தாலும் சென்னை வாசிகள் அசரவில்லை. இன்னும் பல மண்டலங்களில் சொத்துவரி வசூல் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள்.

முன்பெல்லாம் சொத்து வரி வசூல் செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக செல்வார்கள். போதுமான ஆட்கள் இல்லாததால் நிறைய வீடுகளுக்கு செல்ல முடியவதில்லை. ஒரு வசூல் அதிகாரியால் 3000 பேரிடம் மட்டுமே வசூல் செய்ய முடியும். சில மண்டலங்களில் சொத்துவரி செலுத்துபவர்கள் அதிகம். சில இடங்களில் மற்ற இடங்களை விட குறைவாக இருக்கும்.

மாநகராட்சி அதிகாரிகள் நேராக சென்றால் மட்டுமே பல இடங்களில் வசூல் செய்ய முடியும். நடப்பாண்டு சொத்துவரி வசூல் மட்டும் 1400 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1400 கோடி வசூல் செய்வதற்கு சில லட்சங்களை செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒத்துழைப்போடு தினந்தோறும் அறிவிப்பு செய்யப்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் சொத்து வரி செலுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் மார்ச் மாதம் வரை 2 சதவீத தண்டத்தொகையுடன் கட்டலாம். அப்படியும் சிலர் கட்ட மறுப்பதற்கு என்னதான் காரணம்?

சொத்து வரியை அதிகமாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை வழக்குகள் விசாரிக்கப்பட்டால், சொத்து வரி குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே சொத்து வரி கட்டுவதை தள்ளிப்போடுகிறார்கள் என்கிறார்கள். செம பிளான்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com